மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ5 ஆயிரம் கோடி உடனே தர வேண்டும்: நாடளுமன்றத்தில் திமுக கோரிக்கை


புதுடெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு முதற்கட்டமாக இடைக்கால நிவாரண நிதியாக ரூ5,000 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை வைத்து பேசியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் நான்கு மாவட்டங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களைவையில் திமுக எம்பி திருச்சி சிவா பேசும்போது நேற்று வைத்த கோரிக்கையில்,‘‘மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகியவை தொடர் மழையால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து ஓடுவதால் சென்னை உள்பட மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் மழையால் பாதிப்படைந்து முடங்கியுள்ளது. குறிப்பாக வரலாறு காணாத இந்த பெருமழையால் தற்போது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை மற்றும் அதன் பாதிப்பு நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். இருப்பினும், தற்போது இருக்கும் ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் மக்கள் பாதுகாப்பு, மின்சாரம் வழங்குதல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்குவது, குழந்தைகளுக்கு தேவையான பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் செய்து வரப்படுகிறது. இதற்காக மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ள தமிழ்நாட்டுக்கு அதனை சரிசெய்யும் விதமாக ஒன்றிய அரசு முதல் கட்டமாக இடைக்கால நிவாரண தொகையாக ரூ5,000 கோடியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தற்போது இருக்கும் சூழலில் அது மாநில அரசுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனை உடனடியாக ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார். மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘‘மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஒரு கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். அதனால் தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை விரைந்து ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ5 ஆயிரம் கோடி உடனே தர வேண்டும்: நாடளுமன்றத்தில் திமுக கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: