மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஊஞ்சல் உற்சவம் நேற்று நள்ளிரவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் தீபம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து விட்டு செல்வார்கள்.

இந்நிலையில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பால், தயிர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டுப்புடவை மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு நெய்வேத்தியம் தீபாரதனை நடைபெற்றது. அதன் பின் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்து வந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. கணேச ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் வழக்கப்படி தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து தாலாட்டு பாடி நெய்வேத்தியம், தீப ஆராதனை செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அம்மனை வழிபாடு செய்தனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர் மணி, காசாளர் சதீஷ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். அமாவாசையை முன்னிட்டு கோயிலை சுற்றியிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வியாபாரம் களை கட்டியது. ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: