தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 31 வரை 10,000 தொடர் மருத்துவ முகாம்

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை 10,000 தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10 வாரங்கள் நடைபெற உள்ள 10,000 மழைக்கால சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைக்கும் விதமாக சென்னை கோடம்பாக்கம் மண்டலம் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கி டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதாவது 10 ஞாயிற்றுகிழமைகளிலும் மொத்தம் 10,000 தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

மருத்துவத்துறை வரலாற்றிலேயே 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை, இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 1943 மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம், 1,04,876 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கா.கணபதி , துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 31 வரை 10,000 தொடர் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: