மருள் நீக்கும் மல்லப்பா

பல நூறு ஆண்டுகளுக்கு முன் அடர்ந்த காடுகளின் மையப் பகுதியில் இன்றைய பெங்களூருவின் மல்லேஸ்வரம் இருந்தது. அந்தக் காடுகளுக்கு நடுவே ஒரு மலை இருந்தது. பெங்களூரின் வடபகுதியிலிருந்து வரும் பயணிகள் இந்த மலைக்காடுகளில் இரவில் தங்கி ஓய்வெடுப்பார்கள். மலையின் கிழக்குப் புறத்தில் மல்லப்புரா, ஜக்கசந்திரா ஆகிய இரண்டு கிராமங்கள் இருந்தன. இன்றைய மல்லேஸ்வரம் வழியாக பல பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் எருது பூட்டிய வண்டிகளில் போய்க் கொண்டிருந்தனர்.

மாலை மயங்கி சிறிது இருட்ட ஆரம்பித்தது. இரவில் தங்குவதற்காக இந்த மலைப்பகுதியின் மேலே தங்களது கூடாரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெண்கள் இரவு சமையலுக்காக நீர் எடுக்க மலையடிவாரத்திற்குச் செல்ல, ஆண்கள் அடுப்பு பற்ற வைக்க சுள்ளிகள் பொறுக்கிவரச் சென்றார்கள்.
தண்ணீர் மொண்டு வந்த பெண்மணிகள் கற்களால் அடுப்பு உருவாக்கி, அரிசி பானைகளில் தண்ணீரை விட்டு மூடிகளைப் போட்டு மூடி வைத்துவிட்டு, சுள்ளிகளுக்காகக் காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் ஆண்கள் கொண்டு வந்த சுள்ளிகளை அடுப்புகளில் சொருகுவதற்காக, அரிசியும், தண்ணீருமாக மூடி வைக்கப்பட்ட பாத்திரங்களைத் தூக்க யத்தனித்தபோது, பாத்திரங்கள் சூடாக இருந்ததைக் கண்டு வியந்துபோனார்கள். திகைப்புடன் அந்தந்த பாத்திரங்களின் மூடிகளைத் திறக்க, ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள். ஆம், பாத்திரங்களில் இட்டிருந்த அரிசி, பூப்பதத்தில் வெந்து சாதமாகியிருந்தது. அடுப்பையே பற்ற வைக்காத நிலையில், பாத்திரங்களில் இட்ட அரிசி எப்படி வெந்தது? உடனே அந்த மலைப்பகுதியை ஆராயத் தொடங்கினர். அவர்களை மேன்மேலும் வியப்பிலாழ்த்தும் வகையில் லிங்க வடிவில் ஒரு பாறையைக் கண்டார்கள்.

இது பரமேஸ்வரனின் அருள் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைத்து பரவசப்பட்டார்கள். இந்த லிங்கவடிவப் பாறைக்கு தங்களிடம் இருந்த நீரை அபிஷேகம் செய்து, விதவிதமான மலர்களால் அலங்கரித்தனர். சமைக்கப்பட்டிருந்த அரிசி சோற்றை அந்த லிங்கத்துக்குப் படைத்து தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். இதற்குள்ளாக அடுப்பை பற்ற வைக்காமலேயே அரிசி சாதமாக வெந்துவிட்ட அதிசயம் மல்லப்புரா கிராமங்களில் மின்னலாகப் பரவியது. மக்கள் எல்லோரும் ஒன்று கூடி அந்தப் பயணிகளை மனதார வாழ்த்தினர். உடனடியாக லிங்க வடிவ பாறையை மூலவராக வைத்து கோயிலாக கட்ட முடிவெடுத்தனர். அந்த லிங்கப் பாறையை மையமாக வைத்து ஒரு சிறிய கோயிலைக் கட்டி விட்டு, அதன்கீழே நரசிம்மர் கோயிலையும் கட்டினர்.

மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியும், அவர் மனைவியும் இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்திருந்திருக்கிறார்கள். 1898-ஆம் ஆண்டு ராவ் பஹதூர் யேலே என்ற பெரியவர் காடு மல்லேஸ்வரர் கோயிலை மேலும் புதுப்பித்து, பஸவ தீர்த்தத்தையும் செப்பனிட்டார். அடுத்தடுத்து கோயிலில் காசி விஸ்வநாதர், கணேசர், சுப்பிரமணியர், பிரம்மராம்பா, மஹாவிஷ்ணு ஆகியோரும் சிலை உருக்கொண்டு அருள் பாலிக்கத் தொடங்கினார்கள். இந்த காடு மல்லிகார்ஜுனர் கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் தல விருட்சமான அரச மரம், படியேறி வரும் பக்தர்களின் களைப்பைத் தன் குளிர் நிழலால், தெய்வீகத் தென்றலால் போக்குகிறது.

இங்கு நவரங்கா என்ற சிறியதோர் அரங்கம் உள்ளது. இங்கு இசை மற்றும் நாட்டிய முறையில் இறைபணியாக கச்சேரிகள் நடைபெறுகின்றன. மல்லிகார்ஜுனருக்கு அமாவாசையை அடுத்த 6-வது நாளில், பிரம்மோத்ஸவத்தின்போது பிரமாண்டமான ரதோத்சவம் நடைபெறுகிறது. இந்த மலையின் இடதுபுறத்தில், கல்யாண சுப்பிரமணியஸ்வாமி, வள்ளி-தெய்வானையுடன் உறையும் கோயில் ஒன்று இருக்கிறது. 1898-ல் ஸ்வாமி விவேகானந்தர் இந்த தலத்துக்கு வந்து, காடு மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்துவிட்டு தவத்தில் ஆழ்ந்தார் என்பார்கள். காடு மல்லப்பா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் கண்களுக்கு இயற்கை அன்னை விருந்து படைக்கிறாள் என்றாள் அது மிகையால்ல.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில், 15-வது கிராஸ், 2-வது தெருவில் `காடு மல்லேஸ்வரர்’ கோயில் உள்ளது.

The post மருள் நீக்கும் மல்லப்பா appeared first on Dinakaran.

Related Stories: