இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதற்கு வெளிநாட்டு தீவிரவாத குழுக்களின் சதியே காரணம் என்று பாஜ எம்எல்ஏ ஆர்கே இமோ சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கி தற்போது வரை வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ எம்எல்ஏ இமோ சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவது மற்றும் பிரிவினையை பிரசாரம் செய்வதற்கு சர்வதேச தளங்களை பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்கும், நாட்டின் உள்பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக மிசோரமில் இந்தோ-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க வேண்டும். மணிப்பூரில் மோதலை நீடிப்பதற்கும் நாட்டின் பிற பகுதிகளில் மோசமான நடவடிக்கைகளுக்கும் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களே காரணம். மாநிலத்தில் சிபிஐ குழுவை அனுப்பும் முடிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மணிப்பூர் வன்முறைக்கு வெளிநாட்டு தீவிரவாத சதியே காரணம்: அமித்ஷாவுக்கு பாஜ எம்எல்ஏ கடிதம் appeared first on Dinakaran.