மணிப்பூரின் அமைதியை மீட்டெடுக்க திட்டம் தயார்: உள்துறை ஆலோசகர் கூறியதாக சிவில் சமூக அமைப்பு தகவல்

இம்பால்: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு தயாரித்துள்ளதாக உள்துறை ஆலோசகர் ஏ.கே. மிஸ்ரா கூறியதாக மெய்டீஸ் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023 ம் ஆண்டு மெய்டீஸ் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே இன வன்முறை வெடித்தது. இதில், 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கலவரம் ஓய்ந்தது போல் இருந்தாலும் அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி பாஜ முதல்வரான பிரேன் சிங் ராஜினாமா செய்ததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெய்டீஸ் சிவில் சமூக கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் நங்பாம் சம்சான் சிங் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ஒன்றிய உள்துறை ஆலோசகர் ஏ.கே.மிஸ்ராவை நேற்று முன்தினம் அரசு தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முதல் கட்ட திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. இன மோதல்களுக்கு நீண்ட கால தீர்வு காணும் வகையில் ஒரு திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. இந்த திட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படும். ஆயுதங்களை ஒப்படைப்பது, சாலைகளில் மீண்டும் வழக்கமான மக்கள் நடமாட்டத்தை கொண்டு வருவது போன்றவை குறித்து மாநில ஆளுநர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இவை அனைத்தும் முதல் கட்ட திட்டமாகும் என மிஸ்ரா கூறினார்’’ என்றார்.

The post மணிப்பூரின் அமைதியை மீட்டெடுக்க திட்டம் தயார்: உள்துறை ஆலோசகர் கூறியதாக சிவில் சமூக அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: