×
Saravana Stores

ராகுல் காந்தி வலியுறுத்தல் வன்முறை தீர்வாகாது மணிப்பூருக்கு அமைதி தேவை

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் அமைதி பேணும்படி வலியுறுத்தினார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இனத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. ஆங்காங்கே தீ வைப்பு, துப்பாக்கி சூடு, மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியபடி இருந்து வருகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூருக்கு ராகுல் சாலை மார்க்கமாக செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்ற ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இரண்டாவது நாளாக நேற்று இம்பாலில் இருந்து காலை பிஷ்னுபூர் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்ற ராகுல்காந்தி மொய்ராங்கில் உள்ள இரண்டு நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அவர்களது குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி பின்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம், காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ராஜபவன் சென்ற ராகுல்காந்தி மணிப்பூர் கவர்னர் அனுசுயா உக்கியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மணிப்பூரில் அமைதி நிலவ என்ன தேவையோ அதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அமைதி காக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.மணிப்பூருக்கு அமைதி தேவை” என்றார். தொடர்ந்து மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு, ஐக்கிய நாகா கவுன்சில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் கோரிக்கை குழு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த ராகுல்காந்தி அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார்.

The post ராகுல் காந்தி வலியுறுத்தல் வன்முறை தீர்வாகாது மணிப்பூருக்கு அமைதி தேவை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Manipur ,Imphal ,Congress ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் எஸ்ஐயை சுட்டு கொன்ற காவலர் கைது