புதுடெல்லி: விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு மானிய விலையில் கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்கான இரண்டாவது கட்ட திட்டத்தை ஒன்றிய அரசு நேற்று துவக்கியுள்ளது. ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, டெல்லியில் நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: பாரத் பிராண்ட் என்ற பெயரில் மானிய விலையில் உணவு பொருட்கள் விற்கும் திட்டம் கடந்த 2023 அக்டோபரில் துவங்கி, 2024 ஜூன் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோதுமை மாவு, ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அரிசி ஒரு கிலோ 34 ரூபாய்க்கும் விற்கப்படும். இவை, 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படும். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் நிறைவேற்றப்படும் தேவைப்பட்டால் இதைவிட குறைந்த எடையளவு அரிசி, கோதுமை உள்ள பாக்கெட்டுகளும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்), நபேட், கேந்திரிய பந்தர் ஆகியவற்றிலும், இ-காமர்ஸ் வணிக தளங்களிலும் விற்பனை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒன்றிய அமைச்சர் துவக்கி வைத்தார் மானிய விலை அரிசி, கோதுமை விற்பனை: 5, 10 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும் appeared first on Dinakaran.