ராஞ்சி: ஜார்க்கண்டின் கனிம வளங்களை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வரும் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்டின் மாண்டுவில் நேற்று நடந்த பேரணியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே உரையாற்றும்போது, “ஜார்க்கண்ட்டில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட பாஜ தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது மாநிலத்தில் பழங்குடியின முதல்வரிடமிருந்து அதிகாரத்தை பறிக்க பாஜ விரும்புவதை காட்டுகிறது. மக்கள் நலன் மீது எந்தவொரு அக்கறையும் இல்லாத பாஜ ஜார்க்கண்டின் கருப்பு தங்கமான நிலக்கரி உள்பட கனிம வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. பாஜவின் நோக்கம் மக்கள் நலன் அல்ல. ஊடுருவலை பற்றி பாஜ பேசுகிறது.
ஆனால் ஒன்றியத்திலும், அசாமிலும் ஆட்சியில் உள்ள பாஜ ஏன் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றவில்லை? பாஜ அரசு பணக்காரர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. 5 சதவீத பணக்காரர்கள் நாட்டின் 60 சதவீத பணத்தை குவித்துள்ளனர். தலித்துகள், விவசாயிகள் உள்பட 50 சதவீத ஏழை மக்களிடம் 3 சதவீத சொத்து மட்டுமே உள்ளது” என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய கார்கே, “இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என மோடி அளித்த வாக்குறுதி என்னவானது? பிரதமர் மோடி பொய்யர்களின் தலைவர். ஒன்றியத்தில் ஆட்சியில் நீடிக்க பாஜவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஜார்க்கண்ட்டுக்கு தர வேண்டிய நிலக்கரி ராயல்டி நிலுவை தொகை ₹1.36 லட்சம் கோடியை ஒன்றிய அரசு உடனே தர வேண்டும்” என்று கார்கே தெரிவித்தார்.
The post மக்கள் நலன் மீது அக்கறை இல்லை ஜார்க்கண்டின் கனிமவளங்களை கொள்ளையடிக்க பாஜ முயற்சி: கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.