×
Saravana Stores

மணிப்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்தது மாயமான 2 மாணவர்கள் கொலையானது அம்பலம்: போலீஸ் தடியடியில் 30 பேர் காயம்

இம்பால்: மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் மாயமான 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற மாணவர்களை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் 30 மாணவர்கள் காயமடைந்தனர். மணிப்பூரில் மெய்பீஸ் நாகா மற்றும் குக்கி பழங்குடியினர் கடந்த மே 3ம் தேதி நடத்திய ஒற்றுமை பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தற்போது வரை அங்கு வன்முறை சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி காணாமல் போன பிஜம் ஹெம்ஜித், ஹிஜாம் லின்தோயிங்காம்பி ஆகிய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் முதல் வைரலாகி வருகிறது.

இதில் ஒரு புகைப்படத்தில் மாணவர்களின் பின்னால் ஆயுதம் ஏந்தியவர்கள் நிற்பது போன்றும் மற்றொரு புகைப்படத்தில் மாணவர்கள் கொல்லப்பட்டதும் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமை செயலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் மாணவர்களை கலைத்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகளாவர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பதற்ற சூழலை அடுத்து, பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்கும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பிரேன் சிங்கின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மக்களுக்கு உறுதி அளிக்கிறது. எனவே மக்கள் அமைதியை கடைபிடித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மணிப்பூரில் மே 3ம் தேதிக்கு பிறகு 5 நாட்களுக்கு முன்பு தான் இன்டர்நெட் தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்.1ம் தேதி வரை மொபைல் இன்டர்நெட் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்தது மாயமான 2 மாணவர்கள் கொலையானது அம்பலம்: போலீஸ் தடியடியில் 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Avalam ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் எஸ்ஐயை சுட்டு கொன்ற காவலர் கைது