×

விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி தொடர் மழையால் நிரம்பி வரும் நீர் நிலைகள்

water bodies, madurai, Farmers Happyமதுரை : மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால், அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. தற்போது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதன் காரணமாக அனைத்து பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, பல கண்மாய்களில் மறுகால் பாய்கிறது. மேலும் கண்மாய்களில் ஏராளமானோர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். மேலும் வைகை ஆற்றில் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் விவசாயப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்தை சீர்குலைத்து வருகிறது. இதன்படி அவனியாபுரம் அருகே பெருங்குடியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை பராமரிப்பின்றி உள்ளது. இச்சாலையில் மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிப்போர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி தொடர் மழையால் நிரம்பி வரும் நீர் நிலைகள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...