×

கிருஷ்ணகிரி மாவட்டம் மொரணப்பள்ளி கிராமத்தில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி முன்னேற்றம்!!

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்தார்கள்.

இதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில், ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண். 173, நாள் 08.12.2022-ல் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. தரைத்தளம் வரையிலான கட்டுமானத்திற்கான இந்த அனுமதியின் அடிப்படையில் பணிகள் தற்போது முன்னேற்றத்தில் உள்ளன.

பெங்களூரு நகரத்திற்கு அருகிலான அமைவிடம் உள்ளிட்ட காரணங்களால் இப்புதிய பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளின் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதால், கட்டப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையத்தில் தேவைப்படும் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் ரூ. 18.20 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

இதன்படி, கட்டப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையத்தின் முழு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, கீழ்நிலை தண்ணீர் தொட்டி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வசதி உள்ளிட்ட கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓசூர் மாநகர மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓசூர் மாநகர் வழியாக பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அதிகளவிலான பொதுமக்களுக்கும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் வசதிகளுடன் அமையவுள்ள இப்புதிய பேருந்து நிலையம் பெரும் பயனளிக்கும்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் மொரணப்பள்ளி கிராமத்தில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி முன்னேற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Moranapalli Village, Krishnagiri District ,Krishnagiri ,Minister ,Municipal Administration Department ,Tamil Nadu Assembly Council ,Municipal Administration and Drinking Water Supply Department ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை...