மபி காங். வேட்பாளர் அறிவிப்பில் பிரச்னை திக்விஜய்சிங் சட்டையை கிழிக்க வேண்டும்: கமல்நாத் பேச்சால் சர்ச்சை

போபால்: மத்தியபிரதேசத்தில் நவ.17ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் 144 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜவில் இருந்து சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த ரகுவன்ஷிக்கு ஷிவ்புரி தொகுதியில் போட்டியிட இடம் வழங்கப்படவில்லை. மாறாக பிச்சோரிலிருந்து ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த கேபி சிங்கை அங்கு காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரகுவன்ஷியின் ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீட்டை முற்றுகையிட்டனர் .அவர்கள் மத்தியில் பேசிய கமல்நாத்,’ இதற்கு திக்விஜய்சிங்தான் காரணம். அவரது சட்டையை கிழிக்க வேண்டும்’ என்று பேசினார். இந்த வீடியோவை பா.ஜ வைரலாக்கியது. இதனால் கமல்நாத் மற்றும் திக்விஜய்சிங் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இருவரும் இணைந்து வெளியிட்டனர். அப்போது கமல்நாத் பேசும்போது,’ திக்விஜய சிங்கின் ஆடைகளை கிழிக்க வேண்டும் என்று நான் கூறியது குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க விரும்புகிறேன். திக்விஜய் சிங்குடனான எனது பிணைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. என்மீதான முழு அதிகாரத்தை நான் அவருக்கு அளித்துள்ளேன். அந்த அதிகாரம் இன்னும் செல்லுபடியாகும்’ என்றார். அப்போது திக்விஜய்சிங் குறுக்கிட்டு,’ யார் தவறு செய்கிறார்கள் என்பதும் தெரிய வேண்டும். தேர்தல் படிவங்களில் கமல்நாத்தான் கையெழுத்திடுவார். அப்படியானால், யாருடைய ஆடைகளை கிழிக்க வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு கமல்நாத்,’ தவறு இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் (திக்விஜய் சிங்) துஷ்பிரயோகங்களைச் சந்தித்திருக்கிறீர்கள்’ என்றார். அதற்கு,’விஷத்தை அருந்துவது சங்கரரின் (சிவன்) கடமை. எனவே அவர் இதைச் செய்வார்’ என்றார். இதனால் அனைவரும் சிரித்தனர்.

* இதுதான் காங்கிரசின் உண்மையான முகம்

மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில்,’இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம். ஒரு முன்னாள் முதல்வர் மற்றொரு முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகனின் ஆடையைக் கிழிக்க வேண்டும் என்று கூறுகிறார்’ என்றார்.

The post மபி காங். வேட்பாளர் அறிவிப்பில் பிரச்னை திக்விஜய்சிங் சட்டையை கிழிக்க வேண்டும்: கமல்நாத் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: