×

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகு கூடுதலாக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

சென்னை: முதல்வர் கடிதம் எழுதிய பிறகு கூடுதல் ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார். தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 17ம் காலையில் இருந்து 18ம் தேதி மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. காயல்பட்டினத்தில் 2 நாளில் அதாவது 36 மணி நேரத்தில் 116 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 92 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு மாவட்டங்களில் 30 மணி நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

9 ஹெலிகாப்டர் மூலமாக 13,500 கிலோ சாப்பாடு சப்ளை செய்துள்ளோம். திருநெல்வேலி 64,900 லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் சப்ளை செய்துள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் பால் சப்ளை சரியாகி விடும். மற்ற மாவட்டங்களில் இருந்து 46 லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொடுத்திருக்கிறோம். தென்காசி, கன்னியாகுமாரியில் 100 சதவீதம் மின்சாரம் சரியாகி விட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் கொடுக்க வேண்டியுள்ளது.

முதல்வர் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதிய பிறகு கூடுதல் ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 10 ஹெலிகாப்டர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேர் என மொத்தம் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 27 எருமை மாடுகள், 297 ஆடுகள், 29,500 கோழிகள் இறந்துள்ளது. 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 பட்டா வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இறப்பு விவரம் இன்னும் வரவில்லை.

சென்னை வெள்ளத்தையும் தென்மாவட்ட வெள்ளத்தையும் ஒப்பிட முடியாது. தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையே 110 மீட்டர் தூரத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சென்னையில் கூடுதல் செல்போன் டவர் இருக்கும். ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் அப்படி இல்லை. அதனால்தான் தாமதம் ஆகிறது. முதல்வர் எங்களுடன் தொடர்பு கொண்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை இயல்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதைத்தான் நாங்கள் மிக கவனமுடன் செய்து கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த மாதிரி மழை பெய்தால் அமெரிக்கா கூட தாங்காது
படகுகள் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு அரசே டீசல் வழங்கி வருகிறது. டீசல் இல்லாததால் மீட்பு பணி தாமதம் என்பது தவறான தகவல். இந்த மாதிரி பெருமழை பெய்தால் அமெரிக்கா உள்பட உலகின் எந்த நாடும் தாங்க முடியாது என்று தலைமை செயலாளர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகு கூடுதலாக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,Sivdas Meena ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பேரவையில் குட்கா எடுத்துச்சென்ற வழக்கு ஒத்திவைப்பு