×

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

ஈரோடு: ‘தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர்த்துவதற்காக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், எம்பிக்கள் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், அந்தியூர் வெங்கடாச்சலம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: அரசு பள்ளியில் படித்த மாணவிகள், உயர் கல்வியில் சேரும் போது நம்முடைய அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தான் உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 50 சதவீதத்துக்கு மேல் கொண்டு வர வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாடு மட்டும் தான் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. உயர்கல்வி மட்டும் படித்தால் போதாது. வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நம்முடைய இளைஞர்களை பெரிய பெரிய வேலைகளுக்கு தகுதியானவர்களாக உருவாக்குவதும் நம்முடைய அரசின் கடமை. அந்த கடமையைத்தான் நான் முதல்வன் திட்டம் செய்து கொண்டு இருக்கிறது. 31 லட்சம் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைக்கு போனால் மட்டும் போதாது. தொழில் முனைவோராக உருவாகி நீங்கள் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு செய்யும். தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் இருந்து உங்களை எல்லாம் சந்தித்து பேசி இருக்கிறேன். தமிழர்கள் படிக்க வேண்டும். உரிமைகளை பெற வேண்டும், சுயமரியாதை உணர்வோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Erode ,government ,Erode Government College of Engineering ,Dinakaran ,
× RELATED வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம்,...