சென்னை: சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவையை வரும் செப்டம்பர் 3ம் தேதியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது. இந்த விமானம் திங்கள்கிழமை தவிர, வாரத்தின் மற்ற ஆறு நாட்களில், செவ்வாய்க்கிழமையில் இருந்து ஞாயிறு வரையில் தினமும் இயக்கப்படுகிறது. சென்னையில் இரவு 7 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது. அதுபோல் வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து மதியம் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடையும்.
சென்னையில் இருந்து டாக்காவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கட்டணம் ரூ.5,000. அதே நேரத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து எடுத்தால் ரூ.4,796. டாக்காவில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.7,400. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து எடுத்தால் ரூ.7,223 என்று அந்த நிறுவனம் அதிரடி கட்டண குறைப்பை அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமானவர்கள், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு விமானங்களில் வருகின்றனர். அதுபோல் தமிழ்நாடு உள்பட இந்திய மாணவர்கள் பலர், உயர்கல்விக்காக வங்கதேசம் செல்கின்றனர். அவர்களுக்கு இந்த குறைந்த கட்டண விமான சேவைகள் வசதியாக இருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
The post வரும் செப்டம்பர் 3 முதல் சென்னை-டாக்காவுக்கு நேரடி விமான சேவை: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது appeared first on Dinakaran.