×

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

கே.வி.குப்பம்: மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகாவும் ஏற்கனவே 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை. இதனால் நாங்கள் நடுவர் மன்றத்துக்கு வந்தோம். எனக்காக ஒருமுறை பேசி பாருங்கள் என வி.பி.சிங் கூறினார். அதன்படி பேசியும் தீர்வு இல்லை. நேரடியாக பட்டேலும், கலைஞரும், தேவகவுடாவும் பேசியும் அப்போதும் நடக்கவில்லை. பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் மத்திய சர்காருக்கு அறிவித்த பின்னர்தான் அப்போது வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார்.

நாங்கள் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம். மறுபடியும் சென்று பேசினால் என்னவாகும் என்றால், எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்றுதான் சொல்வார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்னைக்கு தீர்வாகாது. உதாரணத்துக்கு தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால் அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meghadatu Dam ,Minister ,Duraimurugan ,KV Kuppam ,Durai Murugan ,Katpadi ,Minister Duraimurugan ,Gadpadi, Vellore district ,Tamil Nadu ,
× RELATED மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற...