தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். வேளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (02-12-2023) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (02-12-2023) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு- தென்கிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும்.

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.12.2023: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.06.12.2023 முதல் 08.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை:

03.12.2023 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் 04.12.2023 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும்,

 

The post தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: