சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக மறைமுகமாக தொடங்கியது. இன்னும் 2 மாதத்தில் நடைபெறவுள்ள 2024 மக்களவை தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், தற்போது தேமுதிக இதற்கான மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பிரேமலதா சுதீஷ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மிக முக்கியமாக கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்பட குறைந்தது 4 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் கேட்டுப்பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மக்களவை தேர்தல் இதுவாகும்.
சரிவில் இருந்து மீண்டு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பா.ஜ.க., பா.ம.க. உடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இந்த முறை அதிமுக அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பிறகு வெளியாகும் என்று தேமுதிக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
The post நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்!: கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கியது தேமுதிக..!! appeared first on Dinakaran.