வண்டியத் தூக்கி உதவி பண்ணுங்க தலைவா.. டிடி செக்கிங் அப்போ பீப்பீ ஊதிய குடிமகன்: நொந்து நூடூல்ஸான போலீஸ்

மதுரை பைபாஸ் ரோடு, போடி லைன் மேம்பாலத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் அதிவேகத்தில் வந்த ஒருவர் முன்புறம் நின்றிருந்த வாகனம், காரின் ஓரத்தில் மோதி விழுந்தார். பின்னர் தள்ளாடி எழுந்தபடி மீண்டும் டூவீலரை எடுத்து ஓட்ட முயற்சித்தார். போலீசார் அவரை நெருங்கிப் பார்த்தபோது, பார்ட்டி நிற்கவே முடியாத அளவுக்கு செம மப்புல இருந்தார். போலீசாரை பார்த்து, ‘வண்டியத் தூக்கி உதவி பண்ணுங்க தலைவா’ என்றார். உடனே போலீசார், ‘தண்ணியடிச்சிருக்கீங்களா?’ என்றதும், ‘நம்புங்க சார்… அப்படியெல்லாம் இல்லை’ என்றவரிடம், போலீசார், பிரீத் அனலைசர் கருவியுடன் மாட்டியிருந்த டியூப்பை வாயில் நீட்டி, ‘ஊதுங்க’ என்றனர். அந்த போதை நபரோ, ஒரு பீபீ ஊதியை கையில் பிடித்து ஊதுவதைப்போல மேலும், கீழும் அசைத்தார். ஊதுவது போல நடிக்கவும் செய்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை பார்த்து சிரித்தனர். போலீசார், ‘‘ஊதுங்க… ஊதுங்க… விடாமல் ஐந்து நிமிடம் ஊதுங்க’’ என போலீசார் தெரிவிக்க, ‘‘என்னைய டார்ச்சர் பண்ணாதீங்க’’ என்ற அந்த போதை நபரிடம், ‘‘நிப்பாட்டாம ஊதுங்க’’ என போலீஸ்காரர் மீண்டும் தெரிவிக்க, ‘‘சார்… அவ்வளவுதான் வரும்..’’ என்றபடி ஊதி முடித்தார். பிரீத் அனலைசர் ரீடிங்கில் 315ஐ பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ‘அடப்பாவி… பிரீத் அனலைசர் கருவியே முடங்கிப் போற அளவுக்கு மூச்சு முட்ட குடித்து விட்டு பார்ட்டி வண்டி ஓட்டியிருக்காப்லயே…’ என்றபடியே, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post வண்டியத் தூக்கி உதவி பண்ணுங்க தலைவா.. டிடி செக்கிங் அப்போ பீப்பீ ஊதிய குடிமகன்: நொந்து நூடூல்ஸான போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: