திருவள்ளூர்: பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இலை சுருட்டு புழு தாக்குதல் காரணமாக நெற்பயிர்கள் கருகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் செழுமையாக வளர்ந்து விரைவில் நெற்கதிர்கள் வரக்கூடிய சூழலில் இலை சுருட்டு புழுவின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் பணப்பாக்கம், ஆவூர், இழுப்பாக்கம், தேவராஜ்சேரி, லட்சுமிபுரம், மடிமைகண்டிகை, ஆசனபுதூர், பெரியகரும்பூர் பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கமாக ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டை நெல் அறுவடை செய்து வந்த சூழலில் தற்போது இலை சுருட்டு புழு தாக்குதலால் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும் இலை சுருட்டு புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் வேளாண்துறை அதிகாரிகளின் பரிந்துரையின்படி வேப்ப எண்ணெய்யை தெளித்தாலும் பலன் இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.
தற்போது ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடு செய்ய அரசு நிவாரணம் அளித்தால் மட்டுமே அடுத்த போகம் விவசாயம் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். நாற்றங்கால் நடவு, கலை பறித்தல், பூச்சுக்கொல்லி தெளித்தல், மேலுரம் இடுதல் என ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ள நிலையில், அறுவடை கூலிக்கு கூட நெல் கிடைக்காது என்கிறார்கள் விவசாயிகள். பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இலை சுருட்டு புழு தாக்குதலால் கருகி வரும் நெற்பயிர்கள்: பொன்னேரி சுற்றுவட்டார நெல் விவசாயிகள் கண்ணீர்..!! appeared first on Dinakaran.