முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை காக்க வழிகாட்டு முறைகள் பிறப்பிக்க நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு விதிமுறைகள் பிறப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்கள் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் சிறப்பு காட்சியின் போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என்று பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், பொது அமைதியை பேணவும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி இது தொடர்பாக உள்துறை செயலர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுதாரர் விளக்கவில்லை. உள்துறை செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை காக்க வழிகாட்டு முறைகள் பிறப்பிக்க நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: