×

4.5 ஏக்கர் நிலம்… ரூ.6.5 லட்சம் லாபம்!

விவசாயத்தில் சாதிக்க பெரியளவில் நிலம் வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். அது தவறு. சிறிய அளவு நிலம் வைத்திருந்தாலும், அதில் விவேகமாக சிந்தித்து பயிரிட்டால் வெற்றிகரமான லாபம் பார்க்கலாம் என்கிறார் சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் அருகே உள்ள எம்பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த தர். தனக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி, பாகல், புடலை, சிறுகீரை, முளைகீரை, நிலக்கடலை, பீர்க்கன், மரவள்ளி என பல பயிர்களைப் பயிரிட்டு அசத்தலான லாபம் பார்த்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது, தனது விவசாய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். “காலங்காலமாக எங்களுக்கு விவசாயம்தான் தொழில். சிறுவயது முதலே விவசாய வேலைகளுக்கு அப்பா, அம்மாவுடன் உதவியாக இருப்பேன். அவர்களிடம் இருந்துதான் விவசாயத்தைக் கற்றுக்கொண்டேன். இப்போது அயோத்தியாபட்டினம் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் ஆலோசனை மூலம் என்னுடைய தோட்டத்தை பகுதி, பகுதியாக பிரித்து, அதில் காய்கறி, கீரை, நிலக்கடலை, கிழங்கு என பயிரிட்டு வருகிறேன். தற்போது 1 ஏக்கரில் மானாவரி பயிரான நிலக்கடலையைப் பயிர் செய்திருக்கிறேன். நிலக்கடலையைப் பொருத்தவரையில் அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய பக்குவம் கொண்டது. வி

தையைப் போடுவதற்கு முன்பு மண்ணில் கட்டிகள் இல்லாமலும், இறுக்கம் இல்லாமலும் தயார் செய்து கொள்வோம். விதையை ஊன்றுவதற்கு முன்பு நான்கு முறை உழவு ஓட்டுவோம். 4வது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் இடுவோம். வேளாண்மைத்துறையில் இருந்து விதைகளை வாங்கி வந்து நடவு செய்கிறேன். மண்ணின் பக்குவத்தை பார்த்துவிட்டு கடைசி உழவின்போது 200 கிலோ ஜிப்சம் இடுவோம். இதனையடுத்து ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 30 செ.மீ. இடைவெளியும், ஒரு வரிசையில் ஒவ்வொரு செடிக்கும் இடையில் 10 செ.மீ. இடைவெளியும் விட்டு நடவு செய்வோம். விதை ஊன்றிய 8 லிருந்து 9வது நாளில் விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் போடப்பட்ட சொட்டுநீர் பாசனம் மூலம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுவேன். பயிர் முளைத்து வரும்போது நிலத்தில் முளைக்கும் களைப்பயிர்களை அகற்றுவோம். அதற்கடுத்து 22 மற்றும் 45வது நாளில் களை எடுப்போம். 45வது நாளில் களையெடுக்கும்போது ஜிப்சம் இடுவோம். களை எடுக்கும்போது செடியோடு சேர்ந்து மண்ணை ஊன்றி விட விடுவோம். இதனால் வேர்கள் காயாமல் இருக்கும்.

வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட்ட நிலக்கடலை பூஸ்டர் மருந்தை 45வது நாளில் செடிகளில் தெளிப்போம். இதனால் ஒரே அளவுள்ள வேர்க்கடலை கிடைப்பதோடு, தரமான பருப்பாகவும் இருக்கும். பின்னர் 10 நாட்களுக்கு ஒருமுறை சீரான வகையில் தண்ணீர் விடுவோம். நிலக்கடலைக்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது. நிலக்கடலை பயிரிடப்படும் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த புதினா இலைகளை அரைத்து, தண்ணீரில் கலந்து வயல்களின் வரப்புகளில் தெளிப்பேன். இதன் வாசத்திற்கு எலிகள் வராது. மீண்டும் 65வது நாளில் நிலக்கடலை பூஸ்டர் மருந்தினை தெளிப்பேன். 110 லிருந்து 120 நாளில் நிலக்கடலை அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்த நிலக்கடலையை வேளாண் துறையினரே வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 1200 கிலோ நிலக்கடலை மகசூலாக கிடைக்கும். ஒரு கிலோ நிலக்கடலைக்கு மானியத்துடன் ரூ.110 தருகிறார்கள். இதன்மூலம் ஒரு போகத்திற்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உழவு, களையெடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் என ரூ.24 ஆயிரம் செலவாகும். இதுபோக ரூ.1.08 லட்சம் லாபமாக கிடைக்கிறது.
20 சென்ட் நிலத்தில் முள்ளங்கி பயிரிட்டு இருக்கிறேன். இதற்கு 1 கிலோ வரை விதைகள் தேவைப்படும். விதைகளை ஊன்றுவதற்கு முன்பு நிலத்தை 4 முதல் 5 வரை நன்றாக உழவு செய்வோம். எங்களுடையது செம்மண் பூமி என்பதால் 4 முறை உழுதாலே போதுமானது. உழவுக்கு பிறகு நிலத்தில் இரண்டரை அடி இடைவெளியில் மேட்டுப்பாத்தி அமைப்போம். மேட்டுப்பாத்தியில் அரையடி இடைவெளியில் 2, 3 விதைகளை ஊன்றுவோம். விதை ஊன்றியதில் இருந்து 8 மணி நேரம் வரை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் விடுவேன்.

விதை ஊன்றிய 2, 3 நாளில் முளைப்பு வரத்தொடங்கும். இந்த நேரத்தில் லேசோ என்ற களைக்கொல்லியை இடுவோம். இதன்மூலம் புற்கள் வராமல் விதை மட்டும் முளைக்கும். 5வது நாளில் 19: 19: 19 ( ஆல் 19) உரம் ஒரு கிலோ, யூரியா 3 கிலோ கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் இடுவோம். 10வது நாளில் ஆல் 19 ஒன்றரை கிலோ, யூரியாக 5 கிலோ கலந்து பாசனத்தில் இடுவோம். 20வது நாளில் ஆல் 19 2 கிலோ, யூரியா 5 கிலோ இடுவோம். 25வது நாளில் 13045 என்ற உரத்தை இடுவோம். 5 நாட்களுக்கு ஒரு முறை சீரான இடைவெளியில் தண்ணீர் விடுவேன். முள்ளங்கியில் அசுவினி பூச்சியின் தாக்குதல் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த காதி சோப் மற்றும் வேப்ப எண்ணெய்யைக் கலந்து டேங்குக்கு 50 மில்லி என்ற அளவில் ஸ்பிரே செய்வோம். இவ்வாறு செய்து வர 45 நாட்களில் முள்ளங்கி அறுவடைக்கு தயாராகிவிடும். அதில் இருந்து தினமும் அறுவடை செய்யலாம். இதில் மொத்தம் 10 நாட்கள் அறுவடை செய்வோம். அறுவடை செய்த முள்ளங்கிகளை நீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து, கட்டிலில் பரப்பி உலர வைப்போம். பின்பு அவற்றை அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வேன். 20 சென்ட் நிலத்தில் இருந்து 6 – 7 டன் மகசூல் கிடைக்கும். நானே நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் ஒரு கிலோ முள்ளங்கிக்கு ரூ.10 முதல் 40 வரை விலை கிடைக்கும். சராசரியாக ரூ.20 கிடைக்கும். குறைந்தபட்சம் 6 டன் மகசூல் கிடைத்தாலும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் உழவு, உரம், பராமரிப்பு என அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் செலவு போனாலும் ரூ.90 ஆயிரம் லாபமாக கிடைக்கும்.

நிலக்கடலை, முள்ளங்கி தவிர 30 சென்ட் நிலத்தில் புடலை, 35 சென்டில் பாகல், 35 சென்டில் பீர்க்கன் ஆகியவற்றைப் பயிரிட்டு இருக்கிறேன். இந்தக் காய்கறி வகைகள் அனைத்தும் பந்தலில் வளரக்கூடியது. அதனால் விதை ஊன்றுவதற்கு முன்பே தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனைப்படி மானியம் பெற்று 10 அடிக்கு ஒரு கல் ஊன்றி அதில் கட்டுக்கம்பி மூலம் பந்தல் அமைத்துக்கொண்டேன். முன்னதாக 5 கலப்பை, கொக்கி, ரொடோவேட்டர் கொண்டு 4 முறை உழவு ஓட்டினேன். இதனைத்தொடர்ந்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர்விட்டு நிலத்தை ஈரப்பதம் ஆக்கிக் கொள்வோம். பிறகு 5 டன் தொழு உரம் இடுவோம். இதோடு கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து நிலத்தை தயார் செய்து கொள்வோம். தயார் செய்து வைத்துள்ள நிலத்தினை மல்சிங் பேப்பர் போட்டு மூடி விடுவோம். இதில் 3 அடி இடைவெளியில் துளை போட்டு விதைகளை ஊன்றுவோம்.

புடலை, பாகலைப் பொருத்த வரையில் விதை ஊன்றிய 7 லிருந்து 8வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். பீர்க்கனில் விதை ஊன்றிய 3 லிருந்து 4வது நாளில் விதையில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். 10 லிருந்து 12 வது நாளில் கொடிகளை சணல்கயிறு கொண்டு பந்தலில் கட்டி விடுவோம். புடலை மற்றும் பாகல் 50 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். பீர்க்கன் 45வது நாளிலேயே அறுவடை செய்யலாம். அறுவடை செய்த காய்கறிகளை நானே நேரடியாக உழவர் சந்தைக்கு சென்று விற்பனை செய்கிறேன். பாகற்காயில் 2.5 டன் மகசூல் கிடைத்தது. இதனை சீசனைப் பொருத்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்கிறேன். சராசரியாக பாகற்காயை ரூ.33 என்ற கணக்கில் சந்தையில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ரூ.82 ஆயிரத்து 500 வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.11 ஆயிரம் செலவு போக ரூ.72,500 லாபமாக கிடைக்கிறது. அதேபோல் புடலையில் 35 சென்டில் 4 டன் மகசூல் கிடைக்கிறது. சந்தையில் கிலோ ரூ.15 லிருந்து ரூ.25 வரை விற்பனை செய்கிறேன். இதில் சராசரியாக ரூ.18க்கு விற்பனை செய்தால் ரூ.72 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.7 ஆயிரம் போக ரூ.65 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. 30 சென்ட் பீர்க்கனில் 3 டன் மகசூல் கிடைக்கிறது. இதில் சராசரியாக பீர்க்கனை கிலோ ரூ.28 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ரூ.84 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.9 ஆயிரம் போக ரூ.75 ஆயிரம் லாபமாக கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் குச்சிகிழங்கை பயிரிட்டுள்ளேன். இதற்கு முன்பு அறுவடை செய்த கிழங்கிலிருந்தே விதைக்கரணை எடுத்து வைத்திருந்தேன். அதனை பதியம் போட்டு தோட்டத்தில் நடவு செய்துள்ளேன். அரை அடிக்கு ஒரு கரணை என்ற கணக்கில் பதியம் போடுவோம். பதியம் போட்ட 8வது நாளில் துளிர் வரத்தொடங்கிவிடும். 2 லிருந்து 3 இலைகள் வந்தவுடன், விதைக்கரணையை எடுத்துச்சென்று நிலத்தில் நடவு செய்வோம். இதிலிருந்து 3வது நாளில் உயிர்த்தண்ணீர் விட வேண்டும். 8 நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். 22வது நாளில் களை எடுப்போம். இந்த தருணத்தில் சூப்பர் பாஸ்பேட் இடுவோம். இது தைப்பட்டம் என்பதால் புரட்டாசியில் அறுவடை செய்வேன். ஏக்கருக்கு எப்படியும் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். அறுவடை செய்த கிழங்குகளை நானே நேரடியாக சென்று உழவர் சந்தைகளில் விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ கிழங்கை சராசரியாக ரூ.25க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் வருமானமாக ரூ.2.5 லட்சம் கிடைக்கிறது. இதில் செலவு ரூ.35 ஆயிரம் போக ரூ.2.15 லட்சம் லாபமாக கிடைக்கிறது. மேலும் 10 சென்ட் நிலத்தில் சிறுகீரை, முளைக்கீரையை பயிரிட்டுள்ளேன். இந்த வகை கீரைகள் 18 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதனை விற்பதன் மூலம் ரூ.12 ஆயிரம் கிடைக்கிறது. செலவுகள் போக ரூ.10 ஆயிரம் லாபமாக கிடைக்கும். அரசு மூலம் உழவர் சந்தையில் எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து காய்கறிகளை விற்பனை செய்கிறேன். இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து என்னிடமிருந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.
தொடர்புக்கு:
தர் – 99528 14481.

The post 4.5 ஏக்கர் நிலம்… ரூ.6.5 லட்சம் லாபம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!