நெல்லை : குற்றாலம், சங்கரன்கோவில் கோயில்களில் விமரிசையாக நடந்து வரும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் நடராஜ பெருமான் நேற்று பச்சை சாத்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நாளை (27ம் தேதி) நடக்கிறது. தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அருள்பாலிக்கும் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.
இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி தேரோட்ட வைபவம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில் நேற்று சித்திர சபையில் நடராஜபெருமானுக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. முன்னதாக பல்வேறு வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் கணேசன் பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர், ஓதுவார் சங்கரநாராயணன் ஆகியோர் நடத்தினர்.
இதில் கட்டளைதாரர் திருமலைக்குமார், மணியம் சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராமையா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜா, சோமசுந்தரம், மிசா சண்முகம், சுரேஷ், வடகரை ராமர், சர்வோதயா கண்ணன், குறும்பலா பேச்சிமுத்து, பாஜ பிரமுகர் செந்தூர்பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், சிவனடியார் கார்த்திக், செண்பகராமன், திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நாளை (27ம் தேதி) நடக்கிறது. குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவில் நடராஜ பெருமான், சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அருள்பாலித்தார். விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் நாளை (27ம் தேதி) அதிகாலை 5.15 மணிக்கு நடக்கிறது.தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தனித்துவமிக்க திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இதன்படி இந்தாண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ருத்ரன் அம்சத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு பிரம்மா அம்சத்தில் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து 8ம் திருநாளான நேற்று விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளியதோடு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதை பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் 10ம் திருநாளான நாளை (27ம்தேதி) புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடக்கிறது.
The post குற்றாலம், சங்கரன்கோவில் கோயில்களில் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.