கோவில்பட்டி பகுதியில் சாம்பார் வெள்ளரி விலை வீழ்ச்சி: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் சாம்பார் வெள்ளரி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அவற்றை பறிக்காமல் கால்நடைகளுக்கு உணவாக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சாம்பார் வெள்ளரி, குறைந்த நாட்களில் பலன் தரக்கூடிய பயிராகும். நடவு செய்து 45 நாட்களில் இருந்து பலன் தர துவங்கும். நோய் தாக்குதல் இல்லையென்றால் தொடர்ந்து 100 நாட்கள் வரை விளைச்சல் இருக்கும். கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.

இங்கிருந்து நெல்லை, தேனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து கேரளாவிற்கு செல்கிறது. தற்போது ஒரு கிலோ சாம்பார் வெள்ளரி ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரைதான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளரியை பறித்து மார்க்கெட்டுக்கு வாகனத்தில் கொண்டு செல்கின்ற செலவிற்கு கூட விலை கிடைக்காத நிலை இருப்பதால் வெள்ளரியை பறிக்காமல் விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி கருப்பசாமி கூறும்போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி பயிரிட்டு பலனுக்கு வரும் வரை ரூ.30 ஆயிரம் செலவாகிறது. குறைந்தது ஒரு கிலோ பத்து ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை விலை கிடைத்தால் தான் கட்டுப்படியாகும். கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை காலத்தில் நல்ல விலை கிடைத்தது. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது, என்றார்.

The post கோவில்பட்டி பகுதியில் சாம்பார் வெள்ளரி விலை வீழ்ச்சி: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம் appeared first on Dinakaran.

Related Stories: