×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் கடந்த மாதம் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பிக்கள் வீரபெருமாள், பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், அமமுக நிர்வாகி கர்சன் செல்வம் ஆகியோரிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு கடந்த வாரம் கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி நேற்று காலை 10.45 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கொடநாடு, கொலை கொள்ளை வழக்கில் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். மாலையில் அவரிடம் விசாரணை முடிவுற்றது. அடுத்த கட்டமாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சிலருக்கு விரைவில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Jayalalithaa ,Poongundran ,Coimbatore ,Former ,Chief Minister ,CBCID ,Sasikala ,Nilgiris district… ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...