கே.கே.நகர் மூதாட்டி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு துப்புதுலங்கியது கொரோனா வறுமையே கொலைகாரனாக கொள்ளைக்காரனாக என்னை மாற்றியது: கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையே கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக என்னை மாற்றிவிட்டது என கே.கே.நகர் மூதாட்டி கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்குப் பின் கைதான குற்றவாளி சக்திவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சீதாலட்சுமி (78). இவருக்கு புவனேஸ்வரி மற்றும் சிவக்குமார் என 2 பிள்ளைகள். மகள் புவனேஸ்வரி கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். மகன் சிவக்குமார் அடையாறில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கணவர் குருமூர்த்தி இறந்து விட்டதால் சீதாலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 2021 அக்டோபர் 28ம் தேதி தனது தாய் சீதாலட்சுமிக்கு மகள் புவனேஸ்வரி போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் சந்தேகத்தின்படி அருகில் வசிக்கும் ரித்தீஷ் என்பவரை வீட்டிற்கு அனுப்பி சீதாலட்சுமியை பார்க்க சொல்லியுள்ளார். அதன்படி ரித்தீஷ் வீட்டிற்கு சென்று சீதாலட்சுமியை பார்த்த போது, அவர் படுக்கையில் இறந்துகிடந்தார். மேலும், அவர் அணிந்து இருந்த 16 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனாலும் சீதாலட்சுமியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 12வது தெருவில் வசித்து வந்த சுந்தரி (81) என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்து 45 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து, சந்தேகத்தின்படி கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் கே.கே.நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சீதாலட்சுமி குறித்து சந்தேகத்தின்படி கைது செய்யப்பட்ட சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஆதம்பாக்கம் மூதாட்டி கொலையை போன்று கே.கே.நகரில் சீதாலட்சுமியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்.

தொடர்ந்து சக்திவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் இன்டீரியர் டெக்ரேஷன் நிறுவனம் ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தார் சக்திவேல். கொரோனா ஊரடங்கு காலத்தில் போதிய வேலை கிடைக்காமல் குடும்பம் நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி தனது குடும்பத்தை நடத்தி வந்தார். பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்தும் சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வீட்டின் வாடகை கொடுக்க முடியாமல் திணறி வந்தார். ஒரு பக்கம் குடும்ப வறுமை, மறுபக்கம் வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் கொடுக்கவில்லை என்றால் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், யோசனையில் இருந்த போது தான், வீட்டின் அருகே வசிக்கும் எல்ஐசி எஜென்டான சீதாலட்சுமி தனியாக வசித்து வருவது நினைவுக்கு வந்தது. உடனே தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க சீதாலட்சுமி வீட்டிற்குள் புகுந்து அவரை தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றுள்ளார். பிறகு அவர் அணிந்து இருந்த 2 செயின், 7 வளையல், கம்மல் என 16 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாதபடி வெளியே வந்துவிட்டார். சீதாலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. திருடிய நகைகளை விற்பனை ெசய்து அதில் வந்த பணத்தை வைத்து தனது குடும்பத்தையும், வீட்டின் வாடகையையும் கொடுத்து வந்துள்ளார்.

சீதாலட்சுமியை கொலை செய்தும் இதுவரை தன்னை போலீசார் கைது செய்யவில்லை. எனவே பெரிய இடத்தில் கைவரிசை காட்டி செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துள்ளார். அதன்படி ஆதம்பாக்கம் பகுதியில் இன்டிரீயர் வேலை செய்யும் போது, மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதை கவனித்துள்ளார். பிறகு அந்த வீட்டை தொடர்ந்து 3 நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளார். அதன்பிறகு மூதாட்டியை தவிர யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்று சீதாலட்சுமியை கொலை செய்தது போல், மூதாட்டியை கொலை செய்துவிட்டு 45 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு ஆட்டோ ஒன்றை பிடித்து கே.கே.நகர் வீட்டிற்கு வந்துள்ளார்.

திருடிய பணத்தில் ரூ.1 லட்சத்தில் 3 மாத வீட்டு வாடகை, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு துணிகள், நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைத்ததும் தெரியவந்தது. மேலும், சீதாலட்சுமியை கொலை செய்ததை போல் திட்டமிட்டு ஆதம்பாக்கம் மூதாட்டியை கொலை செய்ததால் என்னை போலீசார் பிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் போலீசார் சிசிடிவி மற்றும் ஆட்டோ பதிவு எண்கள் மூலம் என்னை பிடித்துவிட்டனர். நான் கொலை செய்யும் நோக்கில் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. எனது குடும்ப வறுமை, வீட்டின் வாடகை கொடுக்க முடியாததால், வேலைக்கு செல்லும் இடங்களில் மதிய உணவு இடைவெளியின் போது, அப்பகுதியில் தனியாக முதியவர்கள் யாரேனும் வசிக்கிறார்களா என்று நோட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டேன்’ என சக்திவேல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post கே.கே.நகர் மூதாட்டி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு துப்புதுலங்கியது கொரோனா வறுமையே கொலைகாரனாக கொள்ளைக்காரனாக என்னை மாற்றியது: கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: