கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* கேக் செய்ய மாவு கலக்கும்போது ஒரு ஸ்பூன் ஆரஞ்ச் மர்மலேட் சேர்த்துக் கலக்கி தயாரித்தால், கேக் ஆரஞ்சு சுவையுடன் இருக்கும்.
* கேக் மற்றும் பிரெட்டை ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்த பின்பு, ஒருமுறை அவனில் வைத்து எடுக்க புத்தம் புதியதாக இருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* இரண்டு பங்கு அரிசி மாவுடன், ஒரு பங்கு வறுத்த மைதா மாவு, தேவையான அளவு உப்பு, காரம், எள், ஒன்றிரண்டாக உடைத்த நிலக்கடலை, சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து ‘எள்ளடை’ செய்யலாம்.

* சூப் தயாரித்த பின்பு அதில் சிறிதளவு ‘கிரீம்’ விட – சூப்பின் சுவை மிக அதிகமாகும்.

* அதிரசம் மாவு, நெய் விளக்கு மாவு இவைகளில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைத்து, பணியாரமாகச் சுட்டு எடுத்தால், இனிப்புப் பணியாரம் எல்லோரையும் ஈர்க்கும்.

* வேர்க்கடலையை வறுத்துத் தூளாக்கி வைத்திருந்தால், பொரியல் செய்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கிளறி இறக்கலாம். அருமையான சுவை கிடைக்கும்.

– எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

* அரிசி உப்புமா மீந்து விட்டால், அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போல படு ருசியாக இருக்கும்.

* பொரித்த அப்பளங்கள், வடாம்கள் மீதமாகிவிட்டால் அவற்றை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் போட்டு நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

– எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.

* மிளகாய்த் தூள், அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் இதர மசாலா பொருட்கள் வைத்திருக்கும் ஜாடிகளில் சிறிதளவு உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

* வெயில் காலங்களில் நான்கு நெல்லை பாலில் போட்டு வைத்தால் பால் திரிந்து போகாது.

* வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் நறுக்கும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கினால் வெங்காயம் தனித் தனியாக வராது.

* அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

* வீட்டில் மோர் அதிகமாகிவிட்டதா? புளிக்க விடாதீர்கள். துளி உப்பு சேர்த்து ஐஸ் ட்ரேயில் கியூப் ஆக வைத்து எடுத்து வேண்டும் போது குளிர்ந்த நீர் சேர்த்து விட்டால் மோரும் வீணாகாது.

* பெருங்காயக் கட்டியை, பொரித்து எடுக்கும் பொழுது எண்ணெய் சுட ஆரம்பிக்கும் பொழுதே போட்டால்தான், மேலேயும் உள்ளேயும் ஒன்று போல் பொரிந்து இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்து போட்டால் மேல்புறம் கறுத்துப் போனால் கூட உட்புறம் பச்சையாகவே இருக்கும்.

* அரிசி உப்புமா செய்யும் போது, தாளிதம் செய்த உடன் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊறவைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் விடவும். பிறகு அரிசிக் குருணையை போட்டு உப்புமா கிளறவும், ருசியும் மணமும் கூடியிருக்கும்.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* ரசம் கொதிக்கும் நிலையில் கொத்தமல்லித் தழையை போட்டு மூடி வைத்து விட்டால் சற்று நேரம் கழித்து ரசம் மணம் வீசும். மேலும் எளிதில் ஜீரணமாகும்.

* முட்டைக்கோஸ், பட்டாணி, கீரைகள் சுவை கூட, அவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்க்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வறுவலுக்கு சீவியவுடன், துணியில் முடிந்து கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்து வைத்து, எடுத்து உப்பு கரைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து பிறகு பொரித்தால், உப்பு ஒரே சீராக இருக்கும்.

* தக்காளிப்பழங்களை நறுக்கி, வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம், சூப் என்று எல்லா உணவு வகைக்கும் தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.

* இட்லி சாம்பாருக்கு கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

– சுந்தரி காந்தி, சென்னை.

உருளை தயிர் குழம்பு

தேவையானவை:
சிறிய உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
தயிர் – 1 கப்,
தேங்காய் துருவல் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 4,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
பட்டை – 1,
ஏலக்காய் – 2,
கிராம்பு – 2,
நறுக்கிய கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவவும்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: