டெல்லி மதுபான ஊழல் விவகாரம் அமலாக்க துறை விசாரணை கெஜ்ரிவால் ஆஜராகவில்லை: சம்மனை வாபஸ் பெறக் கோரி கடிதம்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். மேலும், சம்மனை வாபஸ் பெறக் கோரி அவர் கடிதம் எழுதி உள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அவருக்கு நேற்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜரானால் அவர் கைது செய்யப்படுவார் என சம்மன் அனுப்பும் முன்பாகவே பாஜ எம்பி மனோஜ் திவாரி கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்தார். அதோடு, சம்மனை திரும்பப் பெறக் கோரி அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் அனுப்பினார். அதில், ‘இந்த சம்மன் சட்ட விரோதமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நான் பிரசாரம் செய்வதை தடுக்கும் நோக்கம் கொண்டது.

எதற்காக நான் விசாரணைக்கு அழைக்கபடுகிறேன் என்கிற காரணம் சம்மனில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், நான் தனிநபராக அழைக்கப்படுகிறேனா, டெல்லி முதல்வராகவோ அல்லது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளராக அழைக்கப்படுகிறேனா என்பதும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும்’ என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை 6 முதல் 8 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் மீண்டும் கெஜ்ரிவாலுக்கு புதிய சம்மன் அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

* டெல்லி அமைச்சர் வீட்டில் ரெய்டு
டெல்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ராஜ்குமார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மதுபான கொள்கை வழக்கில், இவரது பெயர் இடம்பெறாத நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் செய்தது, ரூ.7 கோடிக்கு சுங்க வரி செலுத்தாமல் ஏமாற்றியது தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

The post டெல்லி மதுபான ஊழல் விவகாரம் அமலாக்க துறை விசாரணை கெஜ்ரிவால் ஆஜராகவில்லை: சம்மனை வாபஸ் பெறக் கோரி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: