திருப்புவனம் : கீழடி அருங்காட்சியகத்தை கடந்த 9 மாதங்களில் 4.50 லட்சம் பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் தொல்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வைக்கு கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மறுநாள் முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மார்ச் 7ம் தேதி முதல் பார்வையாளர்கள் வருகை பதிவு செய்யப்பட்டது. மார்ச் மாதம் முழுவதும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மார்ச் மாதம் மட்டும் 65 ஆயிரத்து 432 பேர் இலவசமாக பார்வையிட்டுள்ளனர்.ஏப்ரல் 1ம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டினர் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30, வீடியோ கேமரா பயன்படுத்த ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96 ஆயிரம் பேர் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர். மே மாதம் கோடை விடுமுறை என்றாலும் வெயிலின் தாக்கம் காரணமாக பார்வையாளர்கள் வருகை கணிசமாக குறைந்தது. மே மாதத்தில் மட்டும் சுமார் 62 ஆயிரம் பேர் அருங்காட்சியகத்துக்கு வந்துள்ளனர். மார்ச் 5ம் முதல் ஜூன் 18 வரை 102 நாட்களில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 432 பேர் அருங்காட்சியகத்தை கண வந்துள்ளனர். தினமும் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் அருங்காட்சியகத்தை காண வந்த வண்ணம் உள்ளனர்.
அருங்காட்சியகத்தில் உள்ள 10 கட்டிட தொகுதிகளில் ஆறு கட்டிடங்களில் 13,800 தொல்பொருட்கள் இரண்டு தளங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிட தொகுதியிலும் பொருட்கள் காட்சிப்படுத்தியதற்கு ஏற்ப மெகா சைஸ் டிவியில் அனிமேஷன் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒவ்வொரு தளத்திலும் புடைப்பு சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் 54 பேர் அமரும் வகையில் மினி ஏசி தியேட்டரும் உள்ளது.
அதில் கீழடி அருங்காட்சியகம் பற்றிய காட்சித் தொகுப்பு ஒளிபரப்ப படுகிறது. கடந்த ஏப்ரலில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரையிலான 9 மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என 4.50 லட்சம் பார்வையாளர்கள் கீழடி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ஏப்ரல் முதல் டிசம்பர் 31 வரை 9 மாதத்தில் 4.50 லட்சம் பேரை ஈர்த்தது கீழடி அருங்காட்சியகம் appeared first on Dinakaran.