கசனின் குருபக்தி பகுதி-1

அரசர்களுக்குரிய ஐவகை சுற்றத்தார்

1. போர் வீரர்கள்,
2. சகுனம் சொல்வோர்,
3. ஆயுர்வேதர் (மருத்துவர்)
4. நண்பர்,
5. அந்தணர்.
ஆகியோரை மன்னர் தம் அருகே வைத்து இருப்பார்.

தேவ அசுர போர்

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன. “போர்” என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை இருபக்கமும் உயிர் சேதம் ஏற்படும். ஆனால், ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற போரில், ஓர் அணியர் மட்டுமே உயிர்சேதம் இன்றி, போர் செய்தார்கள். இப்படியும் நடப்பதுண்டா? என ஆச்சரியமாக இருக்கிறதா! குருசேத்திரப் போர் நடைபெறுவதற்கு முன்பு இத்தகைய போர் நடைபெற்றது. இப்போரில் ஓர் அணியினர் மட்டும் உயிர்சேதம் இன்றி பிழைத்தனர்.

ஆங்கிசர் மகன் பிரகஸ்பதி

இவரே தேவர்களின் தேவகுரு. விருசபர்வன் என்பவர் அசுரர்களின் மன்னன். இம்மன்னனின் குரு சுக்ராச்சாரியார். இவரை அசுரகுரு என்று அழைப்பர். இவர் பலசாலி என்பதைவிட தந்திரசாலி. தவ ஆற்றலும், கூர்மையான புத்தியும் உடையவர். மிருத சஞ்சீவினி என்ற வித்தையை அறிந்தவர் யார்?

தேவ – அசுரப்போர் அடிக்கடி நடைபெறும். அப்போரில் தேவர்களும் அசுரர்களும் மோதிக் கொள்வார்கள். உயிர்சேதம் இருபக்கமும் நடைபெறும் அல்லவா? அதுதான் இந்த போரில் நடைபெறாது. அசுரர்கள் போரில் இறந்தால், அன்று மாலையே சுக்ராச்சாரியார் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கூறி உயிர்ப்பித்து விடுவார், இறந்தவர்கள் அத்தனை பேரும் தூங்கி விழித்து எழுந்தது போல சாதாரணமாக எழுந்திருப்பார். அடுத்த நாள் போருக்கு மீண்டும் இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து போர் செய்ய கிளம்புவார். அப்பொழுது தேவர்கள், அசுரர்களை கொல்லுவார்கள். கொன்றவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார். ஆனால் தேவர்கள் பக்கம் இவ்வாறு நடைபெறாது. இதனைக் கண்டு தேவேந்திரன் மற்றும் தேவர்கள் வேதனை அடைந்தனர்.

தேவேந்திரன், குருவிடம் கேட்டது என்ன?

தேவர்கள் தங்களின் தேவ குருவான பிரகஸ்பதியை நாடி, “குருவே, தேவர்கள் இப்படி இறந்து கொண்டிருக்கிறார்களே.. அவர்களை காப்பாற்ற நாமும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டால் என்ன?” என்ற வினாவினை இந்திரன் எழுப்பினார். தேவகுரு பிரகஸ்பதி தலையை ஆட்டி“இந்திரா, நீ கூறுவது முற்றிலும் உண்மையே, நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். சுக்ராச்சாரியாரிடம் யாரை அனுப்பி அந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டு வரச் செய்யலாம் என ஆலோசனை செய்கிறேன்” என்றதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் இந்திரன்.

“தேவ குருவே யாரை அனுப்பலாம்” கூறுங்கள் என்று ஒருவருக்குள் ஒருவர் பேசிக் கொண்டனர். “யாரை அனுப்பினாலும் சிறப்பாகக் காரியம் நடைபெறாது. ஆகையினால்,
நாம் அனுப்பும் நபர், சுக்ராச்சாரியாரிடம் சீடராக சேர வேண்டும். அவரிடம் உள்ள மிருத சஞ்சீவினி வித்தையைக் கற்றுக் கொண்டால், தேவர்களுக்கு பயன் உண்டு” என்று கூறியதும். இந்திரன், “நம்மிடம் அப்படி யார் உள்ளார்? தைரியமாக அவரிடத்தில் சென்று தன்மையாகவும், பொறுமையாகவும், பணிவாகவும், பணிவிடை செய்யக் கூடிய குணவான் யார்? அப்படி இருந்தால் அவரையே அனுப்பி நாம் வெற்றி பெறலாம்” என்று கூறியதும், சுக்ராச்சாரியார் இடம் வித்தை கற்க யாரை அனுப்புவது?

இந்திரன், பிரகஸ்பதியை பார்த்து “உம்முடைய மகன் கசனை அனுப்பலாம். அவன் பொறுமை, நிதானம், சமயோசித புத்தி, பிரம்மச்சாரிய விரதம் கடைப் பிடிக்கும் துணிவு, கடமை உணர்வு உடையவன். பெண்களைக் கண்டு மயங்காதவன். இத்தகையவனை நாம் அனுப்பினோம் என்றால், எளிதில் வித்தையைக் கற்றுக் கொண்டு வருவான். எத்தகைய இடர் வந்தாலும் சந்திக்கும் திறமைசாலி” என்றார். அனைவரும் சேர்ந்து கசனிடம் சென்று “நீதான் சுக்ராச்சாரிடம் சீடராக சேர்ந்து மிருத சஞ்சீவினி விஞ்ஞான வித்தை கற்றுக் கொண்டு வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். தந்தையின் அனுமதியோடு கசன், சரி என்று கூறி, தேவர்களிடம் விடை பெற்று, விருசபர்வனி என்ற நகரை அடைந்தார்.

சுக்ராச்சாரியார் கசனை சீடராக ஏற்றாரா?

அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம், தன்னை ஆங்கிரசர் பேரனும், பிரகஸ்பதியின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தன்னை சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடிப்பணிந்தான். அவனின் பொறுமையும், ஆற்றலையும் சுந்தரவதனம் பார்த்து வியந்தார் சுக்ராச்சாரியார். “பிரகஸ்பதியின் மகனே! கசனே! நீ என்னிடம் சீடராக சேர வேண்டுமெனில், அடிப்படை நெறிமுறைகள் உண்டு. அவ்வாறு நீ நடந்தால், நிச்சயம் உன்னைச் சீடராக ஏற்றுக் கொள்வேன்.

எனக்கும் என் மகளுக்கும் நீ” என்று அவர் வார்த்தையை கூறிக் கொண்டிருக்கும் பொழுது, “குருவே! தாங்கள் என்னை சீடனாக ஏற்க அனுமதித்தால், தங்களிடமும், தங்கள் மகளிடமும் நான் அறநெறியோடு நடப்பேன். பிரம்மச்சாரிய விரதத்தில் இருந்து தவற மாட்டேன்” என்றுகூறி திருவடியில் பணிந்தார். மனம் மகிழ்ந்த சுக்ராச்சாரியார் கசனை சீடராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு, இருவருக்கும் பணிவிடைகள் செய்து, குருவிடத்தில் சீடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொண்டு, பிரம்மச்சாரிய விரதத்தை மிக கண்ணியத்துடன் கடைபிடித்தான் கசன்.

கசன் மீது தேவயானி கொண்ட மையல்

கசனின் ஒப்பற்ற செயலும், எழிலார்ந்த தோற்றத்தையும் கண்டு வியந்த தேவயானி, மயங்கினாள். ஆனால், கசன் தன் குருவின் மகளான தேவயானியை தன் சகோதரியாக ஏற்று களங்கமில்லா மனதுடன் அவளுடன் பழகி, பணிவிடைகள் செய்தார். 500 ஆண்டுகள் சுக்ராச்சாரியாரிடத்தில் சீடனாக இருந்தார்.

அசுரர்கள், கசன் மீது கொண்ட பொறாமை

கசன், இந்திர லோகத்தைவிட்டு விருசபர்வனி நாட்டிற்கு ஏன் வரவேண்டும்? அசுரர்களோடு சேர்ந்து கீழ்நிலை பணிகள் ஏன் செய்ய வேண்டும்? ஆச்சாரியார் சுக்ராச்சாரியாரிடம் வந்து கற்க வேண்டிய அவசியம் என்ன? நிச்சயம் உள்கருத்து இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, அறிந்து கொள்ள முயற்சித்தனர். கசன், மிருத சஞ்சீவினி வித்தையை கற்கவே வந்துள்ளான் என்ற ரகசியத்தை அசுரர்கள் அறிந்து கொண்டனர்.

அசுரர்கள் செய்த சதி

அசுரர்கள் அனைவரும் கூடி ஒரு திட்டம் வகுத்தனர். அதன் படி ஒரு நாள், கசன் தன் குருவுக்கும், குரு மகளுக்கும் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்துவிட்டு, ஆடு மாடுகளை மேய்த்து வர காட்டிற்குச் சென்றார். ஆடுகள் புல்லை மேய்ந்திருக்க, கசன் மர நிழலில் ஒதுங்கி தவத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்பக்கமாக வந்த அசுரர்கள், இவனை எவ்வாறு கொல்ல வேண்டும் என்ற திட்டத்தின் படி, அவன் உடம்பை துண்டு துண்டுகளாக வெட்டினர்.

வெட்டிய துண்டுகளை அங்கிருந்த காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்றார். நரி, ஓநாய், காட்டு நாய் போன்ற விலங்குகளுக்கு தீனியாக நாற்பக்கமும் வீசி எறிந்தனர். அன்று மாலையில் பசுக்கள், ஆடுகள் மெய் காப்பான் அதாவது கசன் இல்லாமல் வீட்டுக்கு திரும்பின. இதைக் கண்ட தேவயானி, என்ன இது அத்தனை மாடுகளும் பசுக்களும் தானாகவே வந்து கொட்டகையில் சேர்ந்துவிட்டன?… மேய்த்து சென்ற கசன் காணவில்லையே? என்று எண்ணினாள். தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் சென்று;

“தந்தையே, தங்கள் சீடரான கசன் திரும்பி வரவில்லையே?” என்று அச்சம் கொண்டாவளாய் கேட்டாள். “அருகே எங்காவது இருப்பான் வருவான் கவலைப் படாதே” என மகளுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால், குறிப்பிட்ட நேரம் கடந்தும் கசன் வீடு திரும்பியப்பாடில்லை. ஆகையால் ஆட்களை அனுப்பி இரவு முழுவதும் கசனை தேடும் பணிக்கு உத்திரவிட்டிருந்தார், சுக்ராச்சாரியார்.

தந்தையிடம் மகள் வேண்டுதல்

தேவயானி, தன் தந்தையிடம் “தந்தையே! என்னுடைய அன்புக்கு உகந்த பணிவிடைகள் செய்த கசன் திரும்பவில்லை. அவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லையே” என்று பதறினாள். வருவான் எனக் காத்திருந்து திரும்பாததால், அவரை உயிர்த்தெழ செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். சுக்ராச்சாரியார் மிருத சஞ்சீவினி மந்திரத்தை கூறினார். காட்டு விலங்குகளான நரி, ஓநாய், காட்டு நாய் ஆகியவற்றின் வயிற்றில் இருந்த கசனின் துண்டுகள், விலங்குகள் வயிற்றைக் கிழித்து வெளியே விழுந்தன.

அந்த துண்டுகள் ஒன்று சேர்ந்து ஓர் உடலாக உயிர் பெற்று, கசன் மீண்டும் சுக்ராச்சாரியாரின் ஆசிரமத்தை வந்து சேர்ந்தார். அவனை நேரில் கண்ட பிறகுதான் நிம்மதி அடைந்தாள், தேவயானி. பின்பு தனக்கு நடந்த அநீதிகளை பற்றி சுக்ராச்சாரியாரிடத்தில் கூறினார், கசன். உடனே சினம் கொண்ட சுக்ராச்சாரியார், அசுரர்களை கண்டிக்கின்றேன் என்றார்.

அதன் பின், கசன் மீது தேவயானிக்கு அன்பு அதிகமாகிற்று. இவர்களின் நெருக்கம் அசுரர்களுக்கு மனவேதனையை உண்டாயிற்று. அசுரர்கள், மறுபடியும் கசனை கொல்ல திட்டம் போட்டனர்.
கசன் உடல் கூழானதா? சுக்ராச்சாரியார் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, மலர்களை பறிக்க கசன், தோட்டத்திற்கு சென்றார். மலர்களை பறித்து பூக்கூடையில் போடுகின்ற
சமயத்தில்,அசுரர்கள் மீண்டும் இவனை கொல்ல திட்டமிட்டனர்.

முன்பு போல குரு கசனை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டால், என்ன செய்வது எனச் சிந்தித்தனர். அவன் உடலை வெட்டி நன்கு அரைத்து கூழாக்கி, அருகே இருந்த ஆற்று நீரில் கரைத்துவிட்டனர். நடுஇரவு ஆனது. கசன் வீட்டிற்கு வந்தபாடியில்லை. பூ பறிக்க சென்றவர், நடுஇரவு ஆன பின்னரும் வீடு திரும்பாததை எண்ணி மீண்டும் பதறினாள், தேவயானி. ஓடோடி தந்தையிடம் சென்று, “தந்தையே.. இம்முறையும் அசுரர்கள் கசனை ஏதோ செய்துவிட்டார்கள் போல இருக்கிறது’’ என்று கதறி துடிதுடித்தாள்.

(அடுத்த இதழில்…)

பொன்முகரியன்

The post கசனின் குருபக்தி பகுதி-1 appeared first on Dinakaran.

Related Stories: