? தீபாவளி நாளில் கண்டிப்பாக புத்தாடைதான் அணிய வேண்டுமா?

– பாலாஜி குமார், வேலூர்.
நிச்சயமாக. அன்றைய தினம் அதிகாலைப் பொழுதில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வதை கங்கா ஸ்நானம் என்று அழைக்கிறார்கள். கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் தொலைவது போன்ற பலனை இந்த தீபாவளி நாளில் செய்யும் வெந்நீர் குளியல் ஆனது நமக்குத் தருகிறது. பாவங்கள் தொலைந்து புத்துணர்வுடன் இருக்கும் சமயம் பழைய வஸ்திரங்களை அணிந்தால் எப்படி? நூதன வஸ்த்ரஹா ஷட்தோஷ நிவாரணம் என்று சொல்வார்கள். புதிய ஆடையானது ஆறுவிதமான தோஷங்களைக் களைகிறது
என்பது அதன் பொருள். உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல்தன்மை மற்றும் காலம் தாழ்த்திச் செயல்படுதல் போன்ற தோஷங்கள் புதிய வஸ்திரத்தை அணிவதன்மூலம் காணாமல் போகும் என்பதால்தான் தீபாவளி நாளில் புதிய வஸ்திரத்தை அணிந்துகொள்ள வேண்டும் என்ற பழக்கத்தினை கொண்டிருக்கிறோம். எளிமையான கதர் ஆடையாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த பட்டாடையாக இருந்தாலும் சரி தீபாவளி நாளில் புதிய ஆடைதான் அணிய
வேண்டும்.

? வாஸ்து முறைப்படி ஒரு வீட்டில் பணம், நகை, துணிமணிகளை வைத்துக்கொள்ளும் பீரோவானது எங்கு அமைய வேண்டும்?

– திருமதி. சுலோச்சனா, புதுக்கோட்டை.
முதலில் இவை மூன்றையும் ஒன்றாக வைக்கலாமா என்பதைத் தெரிந்துகொள்வோம். பணம், நகை இரண்டையும் ஒன்றாக ஒரே பீரோவில் வைக்கலாம். இதில் நாம் அணியும் ஆடைகளை வைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் ஒரு முறை அந்த ஆடையை அணிந்தாலே நமது வியர்வையின் மூலம் நமக்குள்ளே இருக்கும் துர்குணங்களும் தோஷங்களும் அந்த ஆடையில் ஒட்டிக்கொள்ளும். வியர்வையில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். நாம் ஒரு முறை கூட அணிந்து பார்க்காத புத்தம்புதிய விலை உயர்ந்த பட்டு ஆடைகளை வேண்டுமானால் பணம் மற்றும் நகை உள்ள பீரோவில் வைக்கலாம். மற்றபடி பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பாத்திரங்களை வைப்பதற்கு என்று தனியாகத்தான் ஒரு பீரோ அல்லது அலமாரியை அமைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இது குபேர மூலை என்று அழைக்கப்படும் வடக்கு திசையில் உள்ள அறையில் வைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் அறை ஏதும் இல்லை என்றால் நீங்கள் எந்த அறையில் பீரோவை வைக்கிறீர்களோ அந்த அறைக்குள் வடக்கு திசையில் வைப்பதும் செல்வ வளர்ச்சியைத் தரும்.

?புதிதாக திருமணமான தம்பதியருக்கு எந்த திசை அறை நல்லது?

– நாகம்மை, மதுரை.
நம்மூரைப் பொறுத்த வரை தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் அறை நல்லது. வடக்கிலிருந்து வீசும் காற்றை வாடைக் காற்று என்றும் தெற்கிலிருந்து வீசும் காற்றை தென்றல் என்றும் அழைப்பார்கள். தென்மேற்கு பருவக்காற்று வீசும் உத்தராயண காலத்தில் திருமணம் நடத்துவது நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் கூறும். தென்மேற்கு மூலையில் ஜன்னல் இருந்து அது வழியாக வீசும் தென்றல் காற்று என்பது புதுமணத் தம்பதியருக்கு உற்சாகத்தைத் தரும் என்பதால் அந்த திசையில் அமைந்திருக்கும் அறை
முக்கியத்துவம் பெறுகிறது.

?மூடிய கிணற்றின் மேல் வீடு கட்டலாமா?

– சந்திரன், வேங்கை வாசல்- சென்னை.
முதலில் கிணற்றை மூடலாமா என்பதை அறிந்துகொள்வோம். தண்ணீர் உள்ள கிணற்றினை மூடக் கூடாது. அதே போல நீர்நிலைகள் ஆன குளம் மற்றும் ஏரிகளை தூர்த்து அதன் மேல் வீடு கட்டுதலும் தவறுதான். நீர் என்பதுதான் இவ்வுலகின் ஆதார சக்தி. நீர் நிலைகளின் மேல் வீடு கட்டுவது என்பது முற்றிலும் தவறு. ஜோதிடவியல் ரீதியாக நீர்நிலைகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் கோள் சந்திரன் ஆகும். இந்த சந்திரனைத்தான் ஜோதிடத்தில் மனோகாரகன் என்று அழைப்பார்கள். இதுபோல் நீர்நிலைகளின் மேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்போரின் குடும்பங்களில் எவரேனும் ஒரு உறுப்பினரின் மனநிலை என்பது பாதிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக கண்டிருக்கிறேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பாதிப்பு அதிகமாக இருப்பதை நம்மால் காணமுடியும். தண்ணீர் உள்ள கிணற்றினை மூடி அதன்மேல் வீடு கட்டுவது என்பது எதிர்மறையான பலனைத் தந்துவிடும். வாஸ்து சாஸ்திரத்தின்படி அந்த மனையில் கிணறு அமைந்திருக்கும் பகுதி சரியில்லை என்றாலும் வேறு வழியே இல்லை மூடித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் உண்டானாலும் அதற்குரிய பரிகார பூஜைகளை நடத்திவிட்டு மூன்று மாதங்கள் கழித்து அந்த மனையில் வீடு கட்டத் துவங்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்குள் அந்த மனையின் சொந்தக்காரர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மேலும் ஏதேனும் பரிகாரங்கள் தேவைப்படுகிறதா என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக தண்ணீர் உள்ள கிணற்றை மூடிவிட்டு அதன்மேல் வீடுகட்டுவது என்பது கூடாது.

?கணவன், மனைவி இருவருமே தாய் தந்தை இல்லாதவர்கள். காசிக்குச் சென்று இவர்கள் இருவரும் தர்ப்பணம் செய்யலாமா?

– சதீஷ், திருப்பூர்.
கணவனானவன் தன்னுடைய தாய், தந்தையருக்கு காசிக்குச் சென்று சிரார்த்தம் என்கிற நீத்தார் கடன் செய்யும்போதே, தன்னுடைய மாமனார். மாமியார் இல்லாத பட்சத்தில் அதாவது மனைவியின் தாய், தந்தை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கும் சேர்த்தே நீத்தார் கடன்களை செய்துவிடலாம். இதில் மனைவி தனியே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கணவனுடைய மாமனார், மாமியார் இருவருக்கும் அவரே சேர்த்து செய்து விடலாம். அப்படித்தான் செய்ய வேண்டுமே தவிர, தனியாக மனைவி மட்டும் தன்னுடைய தாய் தந்தைக்கு செய்யக்கூடாது. இதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். அப்படியே, மனைவி செய்ய வேண்டு மென்று நினைத்தால், அவருடைய சார்பாக மனைவியின் கையிலிருந்து தர்ப்பையை வாங்கி கணவனே செய்யலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் காருணிக பித்ருக்குள் வரிசையில் மாமனார் மாமியார் வருவதால் தாராளமாக இவரே மாமனார் மாமியாருக்குச் செய்யலாம். இதுதான் அதற்கான விதிமுறை.

திருக்கோவிலூர்

K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ? தீபாவளி நாளில் கண்டிப்பாக புத்தாடைதான் அணிய வேண்டுமா? appeared first on Dinakaran.

Related Stories: