கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று உறுதி; மக்கள் அச்சம்

பெங்களூரு: கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதாகவும், மொத்தம் 100 மாதிரிகள் பெறப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாதிரிகளில் ஆறு சிக்கபல்லாபுராவில் உள்ள ஆறு இடங்களில் இருந்து பெறப்பட்டவை.
இவற்றை ஆய்வு செய்ததில் ஐந்து மாதிரிகள் நெகட்டிவ் என்றும் ஒரு மாதிரி பாசிட்டிவ் என்றும் வந்துள்ளது.  மாதிரிகள் பெறப்பட்ட அனைத்து இடங்களுக்கும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளால் ஏற்கனவே சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெங்கடாபுரா, திப்புரஹள்ளி, பச்சனஹள்ளி, வட்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். இப்பகுதியில் சுமார் 5,000 பேரின் உடல்நிலையை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். காய்ச்சல், சொறி, தலைவலி, மூட்டு வலி, சிவப்பு கண்கள் மற்றும் தசைவலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க கர்நாடக சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

The post கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று உறுதி; மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: