காஞ்சி தலைமை மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: நோயாளிகள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், திம்மசமுத்திரம், ராஜகுளம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, அய்யங்கார்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும், அருகிலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரை கவனித்துக் கொள்ள வரும், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளின் உதவியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்போர் அறை மற்றும் வெளியில் மரத்தடி மற்றும் வார்டுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன.

அந்த தெரு நாய்கள் கூட்டமாக மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றி திரிவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதனைகண்டு அச்சம் அடைகின்றனர். யாராவது நாய்களை விரட்டும் போது அது கூட்டத்திற்குள் புகுந்து விடுகிறது. அப்போது பெண்கள் கூச்சலிட்டு அலறியடித்து ஓடுகின்றனர்.இதில், ஒருசில நாய்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு ரோமம் உதிர்ந்து சொறி பிடித்தது போல் உள்ளது. மேலும், உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெருநாய்கள் சுற்றித் திரிவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நோய் தாக்கியதின் காரணமாக வெறிபிடித்துள்ள தெரு நாய்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை துரத்துவதால் அச்சம் அடைகின்றனர். நன்றியுள்ள பிராணியாக அறியப்படும் நாயை நாம் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால் அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அதற்கு பய உணர்ச்சி ஏற்பட்டால் தன்னை தற்காத்துக் கொள்ள மனிதர்களை பயமுறுத்தும். இந்த உணர்ச்சி அதிக அளவில் தூண்டப்பட்டால் மனிதர்களை கடித்துக் குதறும்.

இதனால், ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருப்பதால் நாய்களிடத்தில் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் அச்சம் போக்கும் வகையில் தெருநாய்களின் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post காஞ்சி தலைமை மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: நோயாளிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: