- ATGP
- Kalvarayanmalai
- சின்னா சேலம்
- டேவிட் தேவசிர்வாதம்
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- கருணாபுரம்
- கள்ளக்குறிச்சி
- தின மலர்
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் ஒழிக்கும் பணியை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் ஆய்வு செய்து போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக கல்வராயன்மலையில் தனிப்படை போலீசாருடன், சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீசாரும் தீவிர மதுவிலக்கு ரெய்டு நடத்தி இதுவரை 50க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். கள்ளச்சாராய ஊறல்களையும் அழித்துள்ளனர். இந்நிலையில் சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் நேற்று முன்தினம் கடலூரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கடத்தல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் நேற்று காலை கச்சிராயபாளையம் காவல் நிலையம் வந்த ஏடிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் அங்கிருந்த போலீசாரிடம் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் மதுவிலக்கு பிரிவினரின் செயல்பாடுகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கல்வராயன்மலைக்கு உட்பட்ட சேராப்பட்டு, குரும்பலூர், செருக்கலூர், ஜம்போடை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார்.
அப்போது அதிரடிப்படை மற்றும் தனிப்படை போலீசாரிடம் தயவு தாட்சண்யமின்றி கள்ளச்சாராய ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறினார். குரும்பாலூர் பகுதியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை சோதனை செய்ததை டேவிட் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்பி ரஜித் சதுர்வேதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post கள்ளச்சாராயம் ஒழிக்கும் பணி கல்வராயன்மலையில் ஏடிஜிபி திடீர் ஆய்வு: போலீசாருக்கு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.