ஜூன் மாத நிலுவை 9.1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு உடனே திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ஜூன் மாதத்திற்கான 9.1 டி.எம்சி நிலுவை தண்ணீரை தமிழகத்திற்கு உடனே காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 21வது கூட்டம் டெல்லியில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கேஹல்தார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது காவிரியில் மழை அளவு, நீர் வரத்து, நீர் இருப்பு தரவுகள், பாசன காலத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஆகிய அனைத்து குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை. இருப்பினும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூன் மாத பங்கீடான 9.1 டி.எம்.சி தண்ணீரை தற்போது வரையில் கர்நாடகா கொடுக்கவில்லை. அதுகுறித்த உத்தரவை ஆணையம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த ஆணையத்தின் தலைவர்,‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படியும், நதிநீர் பங்கீட்டின் அட்டவணைப்படியும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜூன் மாத நிலுவை நீரான 9.1டி.எம்.சி தண்ணீரை உடனடியாக காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும். மேலும் மாதாந்திர தண்ணீரை நிலுவை வைக்காமல் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை தவறாமல் கொடுக்க வேண்டும்’’ என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டார்.

The post ஜூன் மாத நிலுவை 9.1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு உடனே திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: