ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு எதிரொலி பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் தீவிரம்-புதர்கள் அகற்றம்

நாகர்கோவில் : பள்ளிகள் திறப்பையொட்டி, பள்ளி வளாகங்களில் தற்போது தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. புதர்கள் அகற்றம், கழிறைகள், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன.தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் வருகிற 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கி உள்ளன. குமரி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக, சமீபத்தில் முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது பேசிய அவர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தங்களது பள்ளி வளாகம், பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவற்றை உரிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் போன்றவற்றை பராமரித்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் மரங்களோ, மர கிளைகளோ இருப்பின் தாசில்தார் அனுமதி பெற்று அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் பழுதடைந்த கட்டுமானங்கள் இருப்பின் அது தொடர்பாக தகவல் தெரிவிப்பதுடன் அதன் அருகே மாணவ, மாணவிகள் செல்ல முடியாத வகையில் தற்காலிக தடுப்பு வேலிகள் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பள்ளிகளில் இருப்பில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி, பராமரிப்பு நிதியை வைத்து சிறிது, சிறிதாக சில பணிகளை செய்து வருகிறார்கள். பெரிய அளவில், சீரமைப்பு பணிகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தற்போது, மாநகராட்சியின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகங்களில் உள்ள புதர்களை வெட்டி அகற்றும் பணி, கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், தண்ணீர் நல்லிகள் பழுது நீக்குதல், மின் இணைப்பு ஒயர்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நமக்கு நாமே திட்ட பங்களிப்புடன் வகுப்பறைகள் சீரமைப்பு, உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். நமக்கு நாமே திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பு நிதியும் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு எதிரொலி பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் தீவிரம்-புதர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: