அழிவிலும் அழகு மார்த்தாண்ட் சூரியக்கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மார்த்தாண்ட் சூரியக்கோயில் அமைந்துள்ளது.

காலம்: கர்கோடாக வம்சப் பேரரசர் லலிதாதித்ய முக்தபிடா (பொ.ஆ.724-760)

சூரியக் கோயில்கள்

பண்டைய பாரதத்தில் சூரிய வழிபாட்டுக்கென அமைந்த பெரிய அளவிலான ஆலயங்களில் புகழ் பெற்றவை: குஜராத்தின் மொதேரா சூரியக் கோயில் (பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டு) மற்றும் ஒடிசாவின் கொனார்க் சூரியக்கோயில் (பொ.ஆ.13-ஆம் நூற்றாண்டு). இவற்றிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலத்தால் முன்னேறிய தொழில்நுட்பம், மனிதவளம் கொண்டு மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது மார்த்தாண்ட் சூரியக்கோயில். `மார்த்தாண்ட்’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் சூரியன் என்று பொருள்.

லலிதாதித்யர்

காஷ்மீரின் ஆன்மிக பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற சின்னமாகக் கருதப்படும் இவ்வாலயம், கர்கோடாக வம்சப்பேரரசர் லலிதாதித்ய முக்தபிடா (பொ.ஆ.724-760) என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து வங்காளம் வரை பரவியிருந்த பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த பெரும் வீரரான லலிதாதித்யர், கர்கோடாக வம்சத்தின் மிகவும் புகழ் பெற்ற பேரரசர்களுள் ஒருவர். லலிதாதித்யர் அமைத்த ஆலயங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமான கட்டுமான பொறியியலுடன் அமைக்கப்பட்டது மார்த்தாண்ட் சூரியக்கோயில்.

ஆலயக் கட்டுமானம்

இந்த கோயிலின் அடித்தளம் பொ.ஆ.5-ஆம் நூற்றாண்டிலேயே காஷ்மீர மன்னன் ரணாதித்தனால் அமைக்கப்பட்டது என்பது சில வரலாற்றாசிரியர்களின் கூற்று.காந்தார, குப்தர் மற்றும் கிரேக்க கட்டிடக்கலைகளின் கலவையில் அமைந்ததாகக் கருதப்படும் இக்கோயில், காஷ்மீரக் கட்டிடக் கலையின் மகுடம் என்றால் அது மிகையன்று. 220 அடி நீளமும் 142 அடி அகலமும் கொண்ட ஆலய வளாகத்தைச் சுற்றி திருச்சுற்றுடன், நடுவில் பெரும் கற்சுவர்களுடனும், பல அடுக்கு நெடுந்தூண்களுடன் பிரதான சந்நதி அமைந்துள்ளது. கருவறை, முக மண்டபம், அந்தராளம் என மூன்று அறைகளுடன் அமைந்த பழமையான காஷ்மீர ஆலயம் இதுவே.

கருவறைக்கட்டிடத்தின் காஷ்மீரக் கட்டிடக்கலையின் தனித்துவமான பிரமிடு வடிவக்கூரையுடன் அமைந்திருந்ததை கட்டிட இடிபாடுகளின் மூலம் அறிய முடிகிறது. மண்டபத்தின் உட்புறச் சுவர்கள், பிற கடவுள்களான விஷ்ணு, இருபுறமும் நதிதேவியரான கங்கை மற்றும் யமுனை, அடையாளங்காண இயலாத வண்ணம் சிதைந்த வேறு சில தெய்வங்களும் சிறிய துணைக் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளனர். மண்டப உள் சுவர்களினுள் உள்ள சிற்றாலய தூண்களின் அலங்கார வேலைப் பாடுகளும், கருத்தியல் தொடர் வடிவங்களும், அழகியல் அம்சங்களும் அதிசயிக்கத்தக்கன.

திருச்சுற்று மாளிகை

இவ்வாலய வளாகத்தினுள் 84 பெரும் தூண்களுடன் கூடிய திருச்சுற்று மாளிகையினைக் காணுகையில், தஞ்சை பெருவுடையார் ஆலய திருச்சுற்று மாளிகை நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஏறக்குறைய அதே போன்ற அமைப்பியலுடன், ஆனால் உயர்த்தப்பட்ட அடித்தளம், பிரம்மாண்ட அலங்காரத்தூண்களுடன் வசீகரிக்கின்றது. தூண்கள், வெளிப்புற சுவர் சிற்றாலயங்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பல சிற்பங்கள் அந்நியர் சூறையாடலினால் சிதைக்கப்பட்டும், இப்பகுதியின் கடுமையான வானிலை மாற்றங்களினால் முற்றிலும் அரிக்கப்பட்டுமுள்ளன.

அழிவிலும் அழகு

ஆட்சியாளர் சிக்கந்தர் ஷா மிரியின் (1389-1413) உத்தரவின் பேரில், கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்ட இந்த அற்புதமான கலைக்கோயில், இப்போது இடிந்து, பாழடைந்து கிடக்கிறது. அதன் இடிபாடுகளினூடே வெளிப்படும் தொன்ம அழகியல் ஒவ்வொரு பார்வையாளர் மனதிலும் பாதிப்பு மற்றும் பரவச உணர்வுகளை ஒரு சேர உண்டாக்குகிறது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்திற்கு, வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post அழிவிலும் அழகு மார்த்தாண்ட் சூரியக்கோயில் appeared first on Dinakaran.

Related Stories: