மேற்கு ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி பள்ளியில் குப்பையை தரம் பிரித்து வழங்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: சுகாதார தூதுவர்களாக மாணவர்கள் செயல்பட மேயர் பிரியா அறிவுரை

சென்னை: மேற்கு ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி பள்ளியில் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சியின் சுகாதார தூதுவர்களாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு மேயர் பிரியா அறிவுரை வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுகளுக்குச் சென்று குப்பை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு சேகரிக்கப்படும் குப்பையும் தரம் பிரிக்கப்படுகின்றன.

மாநகராட்சியின் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பையின் அளவைக் குறைப்பதற்கும், ‘ஜீரோ வேஸ்ட்’ என்ற இலக்கினை நோக்கி செல்வதற்கும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டுக்குட்பட்ட மேற்கு ஜாபர்கான்பேட்டை, சென்னை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திடக்கழிவுகளை முறையாக கையாளுவது குறித்தும், குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. பயிற்சியை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவர்களும் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்கள் சுகாதார தூதுவர்களாக செயல்பட்டு, குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்தும், இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் குறித்தும் குடும்பத்தினரிடத்திலும் மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்’’ என்றார்.

இதை தொடர்ந்து, விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா சான்றிதழ்களை வழங்கினார். மேலும், குப்பையை தரம் பிரித்து அகற்றுதல் குறித்தும், சுற்றுப்புற மேம்பாடு குறித்தும் மாணவர்கள் வரைந்த ஓவியத்தினை பார்வையிட்டு பாராட்டினார். முன்னதாக, இந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை பார்வையிட்டு, விண்ணப்பங்கள் சரியான முறையில் பதிவு செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சுப்பிரமணி, உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூத் சைட், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேற்கு ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி பள்ளியில் குப்பையை தரம் பிரித்து வழங்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: சுகாதார தூதுவர்களாக மாணவர்கள் செயல்பட மேயர் பிரியா அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: