அய்யங்கார்குளம் பகுதியில் சேதமடைந்த சஞ்ஜீவிராயர் கோயில்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் சேதமடைந்த, சஞ்ஜீவிராயர் கோயிலை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் சஞ்ஜீவிராயர் கோயில் அமைந்துள்ளது. பழமையான வைணவ கோயிலை முறையாக பராமரிக்கப்படாததால், பாழடைந்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராம, ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கம் அடைந்தபோது, லட்சுமணனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றார். அப்போது, இந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் மூலவராக ஆஞ்சநேயர், ராமன், சீதை, லட்சுமணன் சன்னதிகள் தனியாக உள்ளன. 3 ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் அமைந்துள்ள இக்கோயிலின் எதிரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமிக்கடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நடவாவி கிணறு உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சஞ்ஜீவிராயர் கோயில் முறையாக பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் மற்றும் பிரகாரங்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.

மேலும், சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ள இக்கோயில் பிரகாரத்தில், ஒருசிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் வருகையும் குறைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சஞ்ஜீவிராயர் கோயிலை முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அய்யங்கார்குளம் பகுதியில் சேதமடைந்த சஞ்ஜீவிராயர் கோயில்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: