இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல் என்று இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நிலவில் இந்தியா! சந்திரயான் – 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்று சாதனை இது. இதற்காக அயராது பாடுபட்டு புதுமையை நிகழ்த்தியுள்ள ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது பாராட்டுகள். இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில்,‘சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் நிறைவை அளிக்கிறது. அதேபோல, சந்திரயான் – 1, 2, 3 ஆகிய திட்டங்களை, முறையே மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, வீரமுத்துவேல் என தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று சிறந்த அறிவியலாளர்கள் தலைமை பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும் திறமையும் நமக்கு எழுச்சியூட்டுகிறது. மேலும், தமிழ்நாட்டின் இளந்திறமையாளர்கள் அனைவரும் இவர்களது வழித்தடத்தைப் பின்பற்றி, நம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: