புதுடெல்லி: ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரசுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அணி அமைவதை நிதிஷ் குமார் எதிர்பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் அகிலேஷ், மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது’ என்று கூறினார்.
ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசச் சென்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் அவமதித்துவிட்டதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் போன்ற முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் நிலையில், ‘காங்கிரஸ் மீது `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கொண்டிருக்கும் அதிருப்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாக இ.கம்யூ கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாட்னா, பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து மூன்று இடங்களில் வெற்றிகரமாகக் கூட்டங்களை நடத்திய ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாட்டில் தற்போது தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் கணக்குகள் வேறுவிதமாக உள்ளன. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் – பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அந்த மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தர்மத்தின்படி ‘சீட்’ ஒதுக்கினால் அது நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறது. மேலும் மேற்கண்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுவிட்டால், மற்ற எதிர்கட்சிகளை கட்டுப்படுத்திவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாக கூறப்படுகிறது.
‘இந்தியா’ கூட்டணியில் அங்கும் வகிக்கும் அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார், இடதுசாரி தலைவர்கள் அடுத்தடுத்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், ஏற்கனவே அவ்வப்போது காங்கிரசுக்கு எதிராக பேசிவரும் ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் கோபத்தில் உள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. அதேபோல் இடதுசாரிகள் போட்டியிட விரும்பிய தெலங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் சீட் கொடுக்கவில்லை. திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா விவகாரத்தில், காங்கிரஸ் இடையே மோதல் இருந்து வருகிறது.
ஆம் ஆத்மியை பொறுத்தமட்டில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்து போட்டியிடுகிறது. மொத்தத்தில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்னர் தான் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூறப்படுகிறது. காங்கிரசுடன் ஒத்துபோகவில்லை என்றால், மூன்றாவது அணியை உருவாக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த கூட்டணியில் தெலங்கானா முதல்வரின் பிஆர்எஸ், ஆந்திர முதல்வரின் ஒய்எஸ்ஆர், பஞ்சாபின் அகாலி தளம் போன்ற கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்க முடியும் என்று நிதிஷ் குமார் யோசித்து வருவதாகவும், கேரளாவில் காங்கிரஸ் – இடதுசாரிகள், பஞ்சாப்பில் காங்கிரஸ் – ஆம்ஆத்மி இடையே பிரச்னைகள் இருப்பதால் மூன்றாவது அணிக்கான சாத்திய கூறுகள் குறித்து மற்ற எதிர்கட்சிகளும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
The post 5 மாநில தேர்தலில் எதிர்கட்சிகளிடம் காங்கிரசுக்கு சலசலப்பு; 3வது அணியை எதிர்பார்க்கிறாரா நிதிஷ்குமார்?.. அகிலேஷ், மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் யோசனை appeared first on Dinakaran.