இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் வெள்ள நிவாரண நிதி வழங்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி ரூ.6,000 வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 5ம் தேதி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உள்ள காந்தி தெரு, சிவாஜி தெரு, வீரசிவாஜி தெரு, கட்டபொம்மன் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு, அம்பேத்கர் தெரு, திருவள்ளுவர் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில், பெரும்பாலான குடிசை வீட்டில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கபட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் மேற்கூறிய பகுதி மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி கிடைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இருங்காட்டுக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் தலைமையிலான பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகையிடம், வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

The post இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் வெள்ள நிவாரண நிதி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: