×

துபாயில் இன்று பிற்பகல் தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம்

துபாய்: இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக விளங்குகிறது ஐபிஎல். கோடிகளில் வருவாய் கொட்டுவதால், இந்த தொடரில் விளையாட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் அபிமான வீரர்கள் எந்த அணிக்காக விளையாடப் போகிறார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனால் ஐபிஎல் போட்டியை போன்றே அந்த தொடருக்கான வீரர்கள் ஏலமும் பிரபலமாக உள்ளது.

மூன்று அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மெகா ஏலம் மட்டுமல்ல, ஒவ்வொரு சீசனுக்குமான மினி ஏலமும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கத் தவறுவதில்லை. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று நடைபெற உள்ளது. மும்பை, பெங்களூர் என இந்திய நகரங்களில் நடந்து வந்த ஐபிஎல் ஏலம் முதல்முறையாக வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மூலம் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் நிர்வாகிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதுவரை ஐபிஎல் ஏலங்களை ஆண்கள் மட்டுமே முன்னின்று நடத்தி வந்தனர். இப்போது முதல் முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஏலத்தை நடத்த இருக்கிறார்.

ஏலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1,166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 333 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 214 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். எஞ்சிய 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் 333 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், அணிகளின் மொத்த தேவை 77 பேர்தான். அவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். அதுமட்டுமன்றி அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களுக்கான ஊதியம் போக எஞ்சியுள்ள தொகைக்கு மட்டுமே தேவையான வீரர்களை ஏலம் கேட்க முடியும்.

அதனடிப்படையில் குஜராத் அணியிடம் அதிகபட்சமாக ரூ.38.15 கோடி கையிருப்பில் உள்ளது. காரணம் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இப்போது மும்பை அணியின் கேப்டனாக மாறியுள்ளார். அதனால் அவருக்கான ஊதியம் ரூ.15 கோடி மிச்சமாகி உள்ளது. அதனால் குஜராத் அணி அதிக விலை கொடுத்து தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் முன்னிலையில் இருக்கிறது. அதே நேரத்தில் 2வதாக அதிக ஏலத் தொகையை வைத்திருக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உள்ளது. அந்த அணியின் கைவசம் ரூ.34 கோடி உள்ளது.

ஏலத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித், புரூக், ரூஸோ, ஹெட், வின்ஸ், இங்லிஸ், டக்கெட், டுஸன், பந்துவீச்சாளர்கள் உமேஷ், ஸ்டார்க், பெர்குசன், அடில் ரஷித், ஹேசல்வுட், மூஜீப் உர் ரகுமான், முஸ்டாபிசுர் ரகுமான், ஷம்சி, ஆல் ரவுண்டர்கள் கம்மின்ஸ், வோக்ஸ், ஷர்துல், ரச்சின் ரவிந்திரா, கேஷவ் மகராஜ், வனிந்து ஹசரங்கா ஆகியோருக்கு கிராக்கி அதிகம் உள்ளது.

ஷாருக்கான் உள்பட பல தமிழக வீரர்களும் நல்ல தொகைக்கு ஒப்பந்தமாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தததில் 10 அணிகளும் ரூ.263 கோடிக்கு செலவிட உள்ளன. உலக கோப்பை, சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு அணி நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்கும். அதனால் இன்றைய மினி ஏலம் ஐபிஎல் ஆட்டங்களை போலவே பரபரப்புக்கு குறைவில்லாமல் இருக்கும்.

* தமிழக வீரர்கள் ஷாருக்கான் (ரூ.40 லட்சம்), ஜெகதீசன், ஜகத்வேத் சுப்ரமணியம், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், மணிமாறன் சித்தார்த் (ரூ.20 லட்சம்) வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

* 56 வீரர்கள் தலா ரூ.50 லட்சம் அடிப்படை விலையிலும், ரூ.40 லட்சத்தில் 4 வீரர்கள், ரூ.30 லட்சத்தில் 6 வீரர்கள், எஞ்சிய வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 11 வெளிநாட்டு வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.75லட்சம்.

* 333 வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

* வீரர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் – ரூ.2 கோடி.

* 13 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.

* ரூ.2 கோடி அடிப்படை விலை பட்டியலில் ஹர்ஷல், ஷர்துல், உமேஷ், கம்மின்ஸ், இங்லிஸ், ஹெட், ஸ்டார்க், டுசன் உள்பட 23 வீரர்கள் உள்ளனர்.

The post துபாயில் இன்று பிற்பகல் தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் appeared first on Dinakaran.

Tags : IPL ,Dubai Dubai ,Indian Premier League ,T20 ,Dubai ,Dinakaran ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு