திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு வசதி வழங்குவது குறித்து தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. உலகப்பிரசித்தி பெற்ற, கலியுக வைகுண்டமாக வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருமலைக்கு வந்து செல்லும் 2 மலைப்பாதைகள், அலிபிரி, வாரி மெட்டு நடைபாதை, க்யூ லைன் வரிசைகள் மற்றும் பிற இடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள், திடீர் நோய் மற்றும் நடைபாதையில் வன விலங்குகள் தாக்குதல்களால் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. இதனை கருத்தில்கொண்டு, இனி வரும் காலங்களில் பக்தர்கள் நலன் கருதி அவர்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக விபத்துகள், திடீர் மாரடைப்பு மற்றும் விலங்கு தாக்குதல்களில் இறப்பவர்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, திருமலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி வருகிறது. பக்தர்கள் அலிபிரியில் இருந்து திருமலைக்கும், திருமலையிலிருந்து அலிபிரிக்கு செல்லும் வரை காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்களுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள், அவர்கள் வசூலிக்கும் பிரீமியங்கள் மற்றும் நன்கொடையாளர் ஆதரவு உள்ளிட்ட பல பிரச்னைகள் மற்றும் சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு: திருப்பதி தேவஸ்தானம் பரிசீலனை appeared first on Dinakaran.
