பிரிவினையை தூண்டும் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: மோடி மீது ப. சிதம்பரம் பாய்ச்சல்

புதுடெல்லி: பிரிவினையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் பெரும்பான்மை அரசு பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது என்று மோடி அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவதும் பூத் அளவில் சிறப்பாக செயல்பட்ட தொண்டர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இதற்கு பதிலளித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

பொது சிவில் சட்டம் மிக எளிதான ஒன்று போன்ற தோற்றத்தை உருவாக்க பிரதமர் முயற்சிக்கிறார். பாஜ அரசின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளினால் நாடு இன்று துண்டாடப்பட்டு உள்ளது. இப்போது பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது மக்களிடையே மேலும் பிரிவினையை உண்டாக்கும். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வலுவான தளமாக பொது சிவில் சட்டத்தை பிரதமர் கையில் எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பெரும்பான்மை கொண்ட அரசாக இருப்பதால், பிரிவினையை அதிகப்படுத்தும் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்க முடியாது. பொது சிவில் சட்டத்தை பற்றிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டார். ஒரு அர்த்தத்தில் அவரது ஒப்பீடு சரியென்றே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது வேறுபட்டுள்ளது. ஒரு குடும்பமானது ரத்த உறவுகளினால் பிணைக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாடு என்பதும் அரசியலமைப்பு என்ற அரசியல்-சட்ட ஆவணத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தில் வேறுபாடுகள் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பும் மக்களிடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிறது. இவ்வாறு அவர் தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

* பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி திடீர் ஆதரவு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்திற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கான பாஜவின் அரசியல் நாடகம் என ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்துள்ளன.

இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கொள்கை ரீதியாக ஆதரிக்கிறது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 44ம் இதை ஆதரிக்கிறது. ஆனாலும், அனைத்து தரப்பு மக்களிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பிறகே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்துடனே செயல்படுத்தப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.

ஏற்கனவே, டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்தால் மட்டுமே அக்கட்சி இருக்கும் கூட்டணியில் சேருவோம் என ஆம் ஆத்மி நிபந்தனை விதித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுடன் முரண்பட்டு பொது சிவில் சட்டத்தை ஆதரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரிவினையை தூண்டும் பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: மோடி மீது ப. சிதம்பரம் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: