×

இந்திய அரசியலிலும், இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்து வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: இந்திய அரசியலிலும் இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்து வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கலைஞர் என கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார். இந்நிலையில் கருணாநிதியின் நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சிக்கு முன்னதாக வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது. கலைஞர் இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்.

கலைஞர் ஒரு அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர். பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் கலைஞர், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் படைப்புகளால் பிரகாசித்து ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

மேலும், கலைஞர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரால் நிலைநிறுத்தப்பட்ட லட்சியங்களைப் போற்றுவதற்காகவும் நினைவு நாணயம் வெளியீட்டு விழா அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது பணியின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த முக்கியமான தருணத்தில், கலைஞர் கருணாநிதிக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் வெற்றி பயணத்தில் தொடரும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* நன்றி சொன்ன முதல்வர்

கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி எழுதிய இந்த கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ‘கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றி அடையும் வகையில் அன்பான வாழ்த்து, ஆதரவு தெரிவித்ததற்கு எனது மனமார்ந்த நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

 

The post இந்திய அரசியலிலும், இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்து வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Modi Pukhasharam ,CHENNAI ,Modi ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்கள்...