×

43 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கேப்டன் சூரியகுமார் அதிரடி அரை சதம்

பல்லெகெலே: இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 43 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கில் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 74 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

கில் 34 ரன் (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார். அடுத்த பந்திலேயே ஜெய்ஸ்வால் (40 ரன், 21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா சற்று பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், சூரியகுமார் – ரிஷப் பன்ட் இணைந்து பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இருவரும் 3வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தனர். 22 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டிய சூரியகுமார் 58 ரன் (26 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பதிராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் 9, பராக் 7 ரன் எடுத்து பதிராணா வேகத்தில் அவுட்டாகினர். பன்ட் 49 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ரிங்கு 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. அக்சர் படேல் 10, அர்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் மதீஷா பதிராணா 4 ஓவரில் 40 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். மதுஷங்கா, அசிதா, அசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து, 43 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 79 ரன் (48 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார்.குசால் மெண்டிஸ்-45ரன்,குசால் பெரைரா 20 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ரியான் பராக் 3, அர்ஷ்தீப் சிங் 2, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

The post 43 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கேப்டன் சூரியகுமார் அதிரடி அரை சதம் appeared first on Dinakaran.

Tags : India ,Captain Suryakumar ,Pallekele ,T20I ,Sri Lanka ,Pallekele International Cricket Stadium ,Dinakaran ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...