×

பீகாரில் பாலியல் குற்றச்சாட்டு: வாலிபருக்கு மொட்டை, செருப்பு மாலை போட்டு மக்கள் நூதன தண்டனை

கதிகார்: பீகாரில் மில் ஓனரின் மனைவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் வாலிபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து கடுமையாக தாக்கி உள்ளனர். பீகாரின் கதிகார் மாவட்டத்தில் கபார் கிராமத்தில் மாவு மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார். இந்த மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஆனந்த், இந்நிலையில், காலப்போக்கில் ராஜீவின் மனைவிக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் மொபைல் போன் வழியே உரையாடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென ஒரு நாள் ஆனந்துக்கு எதிராக ராஜீவின் மனைவி குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களாக ஆனந்த் தன்னை துன்புறுத்தி வந்துள்ளார் என்றும், தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். கணவன் வெளியே சென்றதும் வீட்டுக்கு வந்து விடுகிறார் என்றும் கூறியுள்ளார். ஆனந்த் தகாத முறையில் நடந்து கொண்டு, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்றும் அதனால் கத்தி, கூச்சலிடவே குடும்பத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து விட்டனர் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை அடித்து, உதைத்துள்ளனர். அவரது தலையை ஒரு புறம் மொட்டையடித்து, தாடியையும் ஒரு புறம் மழித்து விட்டுள்ளனர். இதன்பின் செருப்பு மாலை அணிவித்தனர். அந்த பெண் கூறும்போது, தன்னுடன் பேச கூடாது என தன்னுடைய கணவரை ஆனந்த் மிரட்டினார். அப்படி இல்லையென்றால், கணவரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார் என கூறியுள்ளார்.

ஆனால் ஆனந்த் தன்னை அப்பாவி என்று கூறியதுடன், அந்த பெண்ணே தொடர்ந்து தொலைபேசி வழியே தன்னை அழைத்து பேசுவார் என்றும் தன்னை சந்திக்க வரும்படி கேட்டு கொள்வார் என்றும் கூறியுள்ளார். பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசி வழி உரையாடல்கள் நடக்கும் என ஒப்பு கொண்ட அந்த நபர், காதல் தொடர்பு என எதுவும் கிடையாது என மறுத்துள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனந்த் காவலில் கொண்டு செல்லப்பட்டார். எனினும், இரு தரப்பிலும் யாரும் புகார் எதுவும் அளிக்கவில்லை. இதன்பின்னர் ஆனந்த் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

The post பீகாரில் பாலியல் குற்றச்சாட்டு: வாலிபருக்கு மொட்டை, செருப்பு மாலை போட்டு மக்கள் நூதன தண்டனை appeared first on Dinakaran.

Tags :
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்