நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 2,000 பரிந்துரை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேசிய பணிக்குழு ஆலோசனை

புதுடெல்லி:நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 2,000 பரிந்துரை அளிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேசிய பணிக்குழு ஆலோசனை நடத்தியது.  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததோடு, மருத்துவர்களின் பணி பாதுகாப்பு தொடர்பான தேசிய பணிக்குழுவையும் அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி ஒன்றிய அமைச்சரவை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட பணிக்குழு மூன்று வாரங்களில் இடைக்கால அறிக்கையையும், இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட பணிக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியது. இதற்கான இணைய தள போர்ட்டல் மூலம் மக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், ‘மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து மிக முக்கியமான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆலோசனையும் ஆய்வு செய்யப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இடைக்கால அறிக்கையை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது’ என்றார். மேலும் பணிக்குழுவின் அடுத்த கூட்டம் விரைவில் நடக்கலாம் என்றும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இணைய தளம் மூலம் பெறப்பட்டதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 2,000 பரிந்துரை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தேசிய பணிக்குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: